காணி பழங்குடியினர்

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம். இக்காப்பகம் 1988ல் அமைக்கப்பட்டது. இவ்விடத்திலிருந்து சுமார் 14 நதிகள் பிறக்கின்றது, இதில் தாமிரபரணி, கடனா , கோதையாறு, மணிமுத்தாறு , ராமனதி, கரையாறு, சேர்வலாறு ஆகியவை சுற்றியுள்ள 3 மாவட்டங்களுக்கு பாசன நீர் அளிக்கும் முக்கிய நதிகளாகும். சுமார் 800 சதுர கி.மீ பரப்பளவை கொண்ட இக்காப்பகத்தில் புலிகள் மட்டுமின்றி 500க்கும் மேற்பட்ட உயிரினங்களும் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணக்கூடிய பல அறிய வகை உயிர்களை காக்கும் பல்லுயிர்பெருக்கமாக திகழ்கிறது.

2

இவ்வனப்பகுதியில் உள்ள பொதிகை மலையின் அடிவாரத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வருகின்றனர் காணி இனப்பழங்குடியினர். காணி என்றால் 24 மனை கொண்ட இடம் என்று பொருள் என்கிறார்கள். இக்காட்டிற்குள் காணிமக்கள் சின்னமயிலாறு, கரையார், கன்னி கட்டி மற்றும் சேர்வலாறு என நன்கு குடியிருப்புகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் கன்னிகட்டி அருகே இருக்கும் இஞ்சிக்குழி என்னும் குடியிருப்பு, தாமிரபரணி ஆற்றின் ஊற்று துவங்கும் பாணதீர்த்தம் என்னும் இடத்திற்கருகே உள்ளது. இவ்விடம் மையமான வனப்பகுதி என்பதாலும், இங்கு செல்ல பாதை ஏதும் இல்லாததாலும், இங்கு வசிக்கும் காணியின மக்கள் மட்டுமே இவ்விடத்திற்கு வந்துபோக வனத்துறை அனுமதித்துள்ளது. இஞ்சிக்குழியியிலிருந்து மலையின் அடிவாரத்திற்கு வரவேண்டுமென்றால் காட்டு பாதையில் நடந்து வருவது மட்டுமே வழி. இங்கு தற்போது 9 காணி குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள். மற்ற குடும்பங்கள் கீழே உள்ள குடியிருப்புகளுக்கு இடம் பெயர்த்துள்ளார்.காட்டு பாதையில் சென்று வருவதால் முள் செடிகளை அகற்றி பாதை அமைத்துக்கொள்ளவும், விலங்குகளிடமிருந்து தற்காப்பிற்காக கல்லால் எய்தும் வில் ஒன்றையும் பயன்படுத்துகிறார்கள்.

11

3

காணி மக்களை காண கரையார் அணையை ஒட்டியுள்ள சின்ன மையிலார் குடியிருப்பு பகுதிக்கு வந்தோம். ஒரு சிறிய மூங்கில் பாலமே ஆற்றை கடக்க போடப்பட்டுள்ளது. எழில் கொஞ்சும் இயற்கை, திரும்பும் இடமெல்லாம் பல்லுயிர்கள், சுத்தமான காற்று, தூய்மையான நீரூற்று என்று ஒரு பக்கம் இருந்தாலும், நகரத்தார்களால் நினைத்துக்கூடப்பார்க்கமுடியாத எளிமையான வாழ்க்கைமுறையை கொண்டுள்ளனர் இம்மக்கள். இன்றளவும் இங்கு மின் வசதி இல்லை, ஒரு சில வீடுகளில் மட்டும் சோலார் பேனல் வைத்துள்ளனர். நவீன மின்சாதனம் ஏதுமில்லை, ஏன் அரசு தந்த இலவச டிவி, மிக்ஸி போன்றவை கூட உபயோகமற்று உள்ளது. இப்பகுதியில் 1960-களில் இருந்து காரயார் அணையில் மின்சாரம் எடுக்கப்பட்டு வருகிறது, இருந்தும் இப்பகுதி மக்களுக்கு அரசாங்கம் மின்வசதி ஏற்படுத்தி தரவில்லை எண்பது,  இப்பகுதி மக்களின் மீதான அலட்சியத்தையே காட்டுகிறது. வனப்பகுதி என்பதால் இங்கு டவர் இல்லை அதனால் மொபைல் போன்களும் பெரிதாக யாரிடமும் இல்லை, இருந்தாலும் மலையின் கீழே செல்லும்பொழுது மட்டுமே உபயோகிக்கிறார்கள்.

1

நான்கு குடியிருப்புகளை சேர்த்து சுமார் 200 குடும்பங்கள் களக்காடு முண்டந்துறையில் உள்ளனர். இதில் ஒருவர் மட்டுமே மேல் படிப்பு வரை படித்துள்ளார். 10 ஆம் வகுப்பு வரை ஊரின் அருகே உள்ள பள்ளியில் படிக்கிறார்கள் பின்பு மேல்நிலை பள்ளிக்கு மலையின் கீழே செல்லவேண்டுமென படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். கீழே சென்று படிப்பதற்கு போதுமான வசதி இல்லாததும் ஒரு காரணமாக உள்ளது . காணி மக்கள் உணவிற்கு தேவைக்கான பொருட்களை காட்டிற்குள்ளாகவே உற்பத்தி செய்து கொள்கிறார்கள். கப்பை கிழங்குடன் ஆற்றில் பிடித்த மீனை சமைத்து சாப்பிடுகிறார்கள், பலா, முந்திரி போன்ற காட்டில் விளையும் பழங்களை உண்கிறார்கள். ரேஷனில் இலவசமாக அரிசி, பருப்பு தரும் வரை இம்மக்கள் அரிசி உணவையே சாப்பிட்டதில்லை என்கிறார்கள். காணி மக்களின் பொருளாதார நிலை வறுமை கோட்டிற்கு கீழேதான் உள்ளது. கப்பை கிழங்கு , பலாப்பழ சிப்ஸ் செய்து அதை கூட்டுறவு சங்கத்தின் வழியே விற்பது மட்டுமே இம்மக்களின் வருவாய். வருடத்திற்கு ஒருமுறை ஆடி அமாவாசையின் பொழுது  நடக்கும் சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழாவின் போது சுமார் லட்சத்திற்குமதிகமானவர்கள் இங்கு கூடுகிறார்கள். இத்திருவிழாவை ஒட்டி மூன்று நாட்கள் சிறு கடைகள் அமைத்து பழங்கள், கப்பை கிழங்கு போன்றவற்றை விற்று சிறிது லாபம் பெறுகிறார்கள்.

9
கப்பை கிழங்கு உற்பத்தி

காணி மக்களின் வரலாறு

காணி மக்கள் வாழ்ந்து வரும் இக்காடு திருவாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்தது, பின்பு சிங்கம்பட்டி ராஜா தனது ராணி உமை அம்மாளுக்காக சண்டையிட்டு இப்பகுதியை கைப்பற்றினார். இன்றும் இவ்விடத்தை சிங்கம்பட்டி காடு என்றே குறிப்பிடுகிறார்கள்.

90’கள் வரை இங்குள்ள காணிகள் வெளி உலக தொடர்பிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். 1900ல் ஆங்கிலேயர்கள் இந்திய மக்களின் இன அமைப்பியலை கணக்கெடுக்க துவங்கினர். இக்கணக்கெடுப்பின் இறுதியில் ‘எட்கர் தர்ஸ்டன்’ என்பவர் “Castes & Tribes of India ” எனும் புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகத்தில் காணி மக்களை பற்றி அவர் பதிவிட்டுருக்கிறார். இதில் காணி மக்கள் ட்ராவங்கூரின் அருகே காட்டுப்பகுதியில் வசிப்பதாகவும, பழங்கால மனிதர்களை போல குள்ளமாக உள்ளனர் என்று கூறியுள்ளார். காணி மக்கள் 1900கள் வரை வெள்ளை தோல் கொண்ட மனிதர்களை பார்த்ததே இல்லை என்பது ஆச்சிர்யத்தை அளிக்கிறது. வெளியாட்கள் யாரேனும் இவர்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்து விட்டால், தனது பெண்களை பதுக்கி தனிமையான இடங்களில் மறைந்துவிடுகிறார்கள். இது மட்டும் இன்றி இவர்கள் ஒண்ணிலுருந்து பத்து வரை மட்டுமே எண்ண தெறிந்திருக்கிறார்கள். பத்திற்கு மேல் எண்ணவேண்டுமென்றால் ஒவ்வொரு பத்திற்கும் ஒரு கல்லை வைத்து கொண்டு எண்ணுகிறார்கள். 1900க்குப்பின் கிறிஸ்துவ பரப்பாளர்களின் உதவியால் படிக்க கற்று கொண்டுள்ளார்கள்.

இவர்கள் ஒரு காட்டிலிருந்து மற்றொரு காட்டிற்கு மாறிக்கொண்டே நாடோடிகளாக வழக்கூடியவர்கள். நிரந்தரமான வீடுகள் ஏதும் இவர்களுக்கு இருப்பதில்லை. இவர்களின் குடிசைகள் மூங்கிலாலும் புற்களாலும் வேயப்பட்டுள்ளது. ஏதேனும் வனவிலங்கு தங்களின் வீடுகளை தாக்கினாலோ, வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ தனது வீடுகளை அப்படியே விட்டுவிட்டு புது இடத்திற்கு மாறி வீடுகளை கட்டிக்கொள்கிறார்கள். இவர்கள் வசிக்கும் இடங்கள் பொதுவாக யானைகள் கடக்க முடியாத, செங்குத்தான மலை பகுதியாக தேர்ந்தெடுக்கிறார்கள்.இவர்களின் விவசாயத்திற்கு காட்டில் ஒரு சிறிய இடத்தை நெருப்பூட்டி அகற்றிவிட்டு, அதில் இரண்டு மூன்று ஆண்டுகள் பயிரிடுகிறார்கள். நிலத்தின் உற்பத்தி குறைந்த பிறகு அவ்விடத்தை விட்டு வேறிடத்திற்கு குடிப்பெயர்கிறார்கள். கப்பை கிழங்குகளை மட்டுமே விளைவித்து வருகின்றனர். செடிகளின் அறுவடையின் பொழுது காணி மக்களின் காவலாக உள்ளவர்கள் மரவீடுகளில் தங்கி காட்டு தேவதைகளை வணங்கி பாடல்களை கோஷமிடுவதை வழக்கமாகக்கொண்டுள்ளனர். மலை, ஊற்று இரண்டும் உள்ள இடத்திலோ, காட்டு மரங்கள் மற்றும் தனக்கு அதிர்ஷ்டமாக கருதும் குறிப்பிட்ட இடங்களில் பிரார்த்தனைகளை நிகழ்த்துகின்றார்கள் காணி மக்கள். இவர்களுக்கு ஆண்மா, அமரர்த்துவம், சொர்கம், நரகம் போன்றவை பற்றிய எண்ணங்களே இல்லை என்கிறார் தர்ஸ்டன்.

DSC02662
காணி குடிசைகள் PC: Late Vijayavel

மூட்டுக்காணி

காணி மக்கள் சிறு குழுக்களில் வசித்து வருகிறார்கள். ஒவ்வொரு குழுவிற்கும் தலைமை தாங்குபவரையே மூட்டுக்காணி என்றழைக்கின்றனர். மூட்டுக்காணி என்பவரே குழுவின் முக்கிய முடிவுகளை எடுக்கிறார். பயிரிட ஆரம்பமாகும் காலத்தையும், விளைச்சலை எடுப்பதற்கான நேரத்தையும் மூட்டுக்காணியே முடிவெடுக்கிறார். குழுவிலிடையே வரும் சிறு பிரச்சனைகளை சரி செய்வதும் இவரது பொறுப்பாகும். சுதந்திரத்திற்கு முன்பு வரை இம்மக்களுக்கான தண்டனைகளையும் மூட்டுக்காணி அளித்துள்ளார். பெண் விஷயத்தில் தான் தண்டனைகள் அளிக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.

காணிகளின் மொழி

காணி மக்கள் மலையாளம் மற்றும் தமிழ் கலந்த பேச்சு வழக்கை கொண்டுள்ளார். இவர்களின் பாஷயை மலை பாஷை என்கிறார்கள் காணி மக்கள். இப்பாஷைக்கு எழுத்து வடிவம் ஏதுமில்லை. தற்போது காணி பாஷை இம்மக்களிடையே குறைந்து வருகிறது. கேரளா எல்லையில் உள்ளவர்கள் மலையாளத்தையும், இங்கு உள்ளவர்கள் தமிழையும் பேச துவங்கியுள்ளனர். இளம்தலைமுறையினருக்கு இப்பாஷை பரிச்சயம் இல்லாமல் இருப்பது வருந்தத்தக்கதே. இவர்களின் பாஷையை தக்கவைத்துக்கொள்ள காணி குழந்தைகள் அதிகம் படிக்கும் சின்ன மயிலார் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் காணி பாஷையில் பேச்சு போட்டிகள் நடத்தி ஊக்குவித்து வருகிறார்கள்.

மரபுசார் மருத்துவமுறை

காணிகளின் மருத்துவ முறை ஓர் சிறப்பம்சமாகும். நம் நாட்டின் பராம்பரிய மூலிகைகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறார்கள் காணி மக்கள் . இக்காட்டில் வளரும் ஆரோக்கிய பச்சிலை என்ற மூலிகையை கொண்டு தயாரிக்கப்படும் ஜீவானி என்ற மருந்திற்கு இவர்களிடம் காப்புரிமை உள்ளது, உடம்பை சோர்வடையாமல் வைத்துக்கொள்ளக்கூடிய ரசாயன சுரப்பிகள் இச்செடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பிற்கு முன்பாகவே மரபுசார் அறிவாக, இச்செடியின் பயன்கள் காணிமக்களுக்கு தெரிந்துள்ளது. இதுபோன்ற மூலிகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வதால்தான் காணிகள் காட்டிற்குள் சோர்வின்றி சுலபமாக சுற்றிவருகிறார்கள் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.  ‘ஜீவாணி’ என்ற இம்மூலிகையின் நன்மைகளை இம்மக்களிடமிருந்து அறிந்து கொண்ட ஒரு ஆயுர்வேத நிறுவனம் அதை தன் பெயரில் காப்புரிமை பெற்று வணிகமயமாக்கி விற்று வந்தது. இதை பற்றி அறிந்த ஒரு அரசு-சாரா நிறுவனம், ஜீவாணி காணிகளின்  மரபுசார்ந்த அறிவு என்பதால் காணி மக்களுக்கே இக்காப்புரிமை சொந்தமாகுமென வழக்கு பதிவிட்டு இவர்களுக்கு இக்காப்புரிமையை பெற்று தந்தனர்.

Trichopus_zeylanicus3
ஆரோக்கிய பச்சிலை

ஆதிவாசி மக்களின் மரபுசார் அறிவை பயன்படுத்தி வணிகமயமாக்கி வருகின்றது இதுபோன்ற பெறு நிறுவனங்கள். இதை பற்றிய போதுமான விழிப்புணர்வு இன்றளவும் இம்மக்களிடம் இல்லை என்பதே உண்மை. இதை பற்றிய கல்வியும் விழிப்புணர்வையும் மேம்படுத்தவேண்டியது அரசின் தலையாய கடமையாகும். இன்று மாறி வரும் பழக்கங்களுக்கிடையே இவர்களின் வழக்கை முறையில் அன்றாடம் பயன்பாட்டில் இருக்கும் மரபு சார் அறிவை பற்றிய விவரங்களை தொகுத்து பட்டியல் எடுப்பது அவசியம். நம் நாட்டின் பல முக்கிய மூலிகைகளை பற்றிய விவரங்கள் இம்மக்களின் பாரம்பரிய வைத்திய முறையில் உள்ளது. இதை பதிவு செய்வது மட்டுமின்றி இப்பாரம்பரிய அறிவை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதை பற்றிய விழிப்புணர்வை நாம் இம்மக்களுக்கு கொடுக்க தவறிவிட்டோம் என்றே கூறலாம்.

சாத்து பாட்டு

காணி மக்கள் சாத்து பாட்டு என்னும் இசையை வைத்து நோய்களை குணப்படுத்த முடியும் என நம்புகிறார்கள் . கொக்கரை என்னும் இரும்பிலாலான குழாய் வடிவ இசை கருவியை இப்பாட்டிற்கு பயன்படுத்துகிறார்கள். இக்குழாயின் நடுவில் ஒரு சிறு பிளவை கொண்டுள்ளது. கொக்கரையுடன் ஆணி போல் உள்ள இரும்பு கம்பியை இணைத்துள்ளனர். பிளவிருக்கும் பக்கத்தில் ஆணியை வைத்து தேய்த்து சப்தமெழுப்புகிறார்கள்.

இவ்விசையை உடல் நலமுற்றிருப்பவரை வைத்து, சூரியன் மறைந்ததும் நெருப்பூட்டி விடியும்வரை விடாமல் பாடுகிறார்கள். விடிந்ததும் நோய் தேறவில்லை என்றால் மட்டுமே ஊர் வைத்தியரிடம் அழைத்து சென்று மூலிகைகளால் குணப்படுத்துகிறார்கள்.  மழை வரவில்லை என்றாலோ, விளைச்சல் இல்லை என்றாலோ கூட இப்பாட்டை கூடி பாடுகிறார்கள். இதே போன்ற கொக்கரையை வைத்து பாடும் வழக்கம் கேரளாவில் உள்ள புலையர் இனத்தார்களிடமும் உள்ளதாம்.

பொழுதுபோக்கு 

ரேடியோவைதான் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்கு பயன்படுத்துகிறார்கள். ரேடியோவில் செய்திகளையும் கேட்கிறார்கள். வானிலை பற்றிய தகவல்கள் முக்கிய பங்களிக்கிறது. மின் வசதி இருக்கும் வீட்டில் கூடி சிடி/ டிவிடிகளில் அவ்வப்போது படம் பார்க்கின்றனர்.  1990கள் வரை மரப்பட்டையிலானா உடைகளை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள். ஊடகத்தின் தாக்கத்தின் பின்பும், இவ்விடத்திற்கு வெளிமக்களின் வருகை பெருகியதற்கு பின்னரே சேலை, பாண்ட், ஷர்ட் போன்ற உடைகளை பயன்படுத்தத்துவங்கியுள்ளனர். ஊடகத்தின் வெளிப்பாட்டிற்கு பின்புதான் காதல் திருமணங்கள் தோன்றியதென்றும், கல் குடிக்கும் பழக்கம் குறைந்து, மது அருந்தும் வழக்கம் அதிகமானது என்கிறார்கள் ஊர் மக்கள்.

வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் தாக்கம்

1982 ல் அமலுக்கு வந்த வன உயிர் பாதுகாப்பு சட்டத்திற்கு பின்பு இம்மக்களின் வாழ்க்கை முறை பெரும் மாற்றத்தை கண்டது. நடைமுறையில் உள்ள வேட்டை மற்றும் பயிரிடும் பழக்கங்கள் அனைத்தும் வன உரிமை சட்டத்திற்கு பின்பு தடை செய்யப்பட்டுள்ளன. சீரான பொருளாதார வளர்ச்சி இல்லாததால், காட்டை விட்டு வெளியேற முடியவில்லை. காட்டிலும் தன் இயல்பில் வாழ முடியாமல் பெருமழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 1942’ல் திறக்கப்பட்ட கரையார் நீர்மின் நிலையத்திற்கு அருகேயுள்ள காணி குடியிருப்புகளில் இன்றளவும் மின்வசதி இல்லாமல் இருப்பது ஆச்சர்யமளிக்கிறது. அரசாங்கத்தின் சலுகைகள் இப்பழங்குடி மக்களுக்கு சீராக போய் சேருவதில்லை என்பதை நேரடியாக பிரதிபலிக்கிறது.

இவர்களின் பொருளாதார நிலையை பற்றி சற்றும் பொருட்படுத்தாமல், தன் இயல்பில் இருப்பதை வைத்து நிறைவாக வாழ்ந்து வருகின்றனர் காணி மக்கள். காணி மக்கள் ஏன் இன்னும் இக்காட்டை விட்டு வெளியே வரவில்லை? என்று கேட்கையில் இக்காடு எங்கள் தாய் வீட்டை போல் வெளியே செல்லலாம், ஆனால் வீடு திரும்பியாகவேண்டுமே என்கின்றனர். இக்காடு விலைமதிப்பில்லா சொத்து, இங்குள்ள சுத்தமா கற்று, அமைதியான சூழல், இயற்கையோடு இணைந்து வாழும் வரம், அமுதத்தைப்போலுள்ள நீரூற்று , பூங்குளம் என்னும் தாமிரபரணி தோன்றும் ஊற்றில் குளித்து விட்டு வந்தால் வரும் புத்துணர்வு, நகரத்தில் கிடைக்குமா என்ன! என்று கேட்டார் ஊர் தலைவர். பொருளாதாரத்தில் உயர்ந்திருந்தாலும், இம்மக்களுக்கு முன் நகரத்தில் வாழும் நாம் ஏழைகள் தானே என்று தோன்றியது.

DSCN5084
பூங்குளம் PC: Late Vijayavel
DSCN5060
பொதிகை மலை PC: Late Vijayavel

I am a Passionate Traveller, Photographer and Film Maker. I feel Literature and Arts are the essence of life and I go by the verse "I Read, I Travel, I Become". Join my site for my Tales and Travels.