ஸ்டீவ் மெக்குரியின் புகைப்படங்கள்

புகைப்படக்கலையில் என்னை ஊக்குவித்த மாபெரும் புகைப்படக்கலைஞர்களில் ஒருவர் ‘ஸ்டீவ் மெக்குரி’. அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவ் மெக்குரியின் புகைப்படங்கள் உலகப் பிரசித்திப்பெற்றவை. ‘நேஷனல் ஜியோகிராபி’ இதழின் பல முக்கிய முன்னட்டை படங்களை எடுத்துள்ளார் . முதலில் ஒளிப்பதிவை பயில தொடங்கிய இவர், பின் புகைப்படக்காரராக உருமாறினார். சில தினசரி பத்திரிக்கைகளில் இரண்டு வருடங்கள் வேலைபார்த்தபின், தன் முழுநேரபணியை விட்டுவிட்டு 1978ல் இந்தியாவில் உள்ள பருவமழையை பதிவு செய்ய வந்தார்.

இந்திய பருவமழையின் பதிவுகள்

இப்படத்தொகுப்பில் எனக்கு பிடித்தமான விஷயம் என்னவென்றால், பேரிடரின் துயரத்தின் நடுவே இருக்கும் இன்பங்களைப் பதிவு செய்திருக்கிறார் மெக்குரி. அறுபது வயது முதியவர் ஒருவர் கழுத்தளவு தண்ணீரில் தையல்கருவி ஒன்றை சிரித்துக்கொண்டே தூக்கிச்செல்லும் புகைப்படம் மனதை உறுத்துகின்றது. துயர்நிலையிலும் இப்படி ஒரு மனிதரால் சிரிக்க முடியுமா! என வியப்பயளிக்கின்றது. இத்தொகுப்பிலிருக்கும் அனைத்து புகைப்படங்களும் இதுபோன்ற பிம்பத்தையே பிரதிபலிக்கிறது. பொதுவாகப் பத்திரிக்கையில் வரும் புகைப்படங்களிலிருந்து மாறுபட்டவை மெக்குரியின் படங்கள். இயற்கை பேரிடர்களை பதிவு செய்ததில், அனுதாபம் தரும் பிம்பமில்லாத புகைப்படத்தொகுப்பிது. இந்திய பருவமழையை, இதுபோன்று வேறுயாரும் தொகுத்ததில்லை என்றே கூறுவேன். இத்தொகுப்பைப்பார்க்கையில் அலெக்சாண்டர் பார்டெர் என்பவர் எழுதிய ‘Chasing the Monsoon’ என்ற புத்தகமே நினைவில் வந்தது. இப்புத்தகத்தின் ஆசிரியர் இந்தியாவின் பருவமழை துவங்கும் இடத்திலிருந்து, அது போகும் பாதையைப் பின்னோக்கி சென்று அதன் அனுபவங்களைப் பற்றி எழுதியுள்ளார். இந்தியாவைப் பற்றிய பயண தொகுப்புகளில் எனக்கு பிடித்தமான புத்தகமிது.

மெக்குரியின் உருவப்படங்கள்

மெக்குரி உருவப்படங்களைத் திட்டமிட்டே எடுக்கிறார். ஒருவரிடம் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று அணுகையில் 100 சதவீதம் ஒப்புக்கொள்வார்களா? என்று தெரியாது ஆனால் கேக்கத்தயங்கினாள் ஒரு படத்தை விட்டுவிடக்கூடும் என்கிறார். இவரது உருவப்படங்களில் கண்கள் மிக முக்கிய பங்களிக்கிறது. கண்கள் ஒரு மனிதனின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் வலிமை கொண்டது. இவரின் படங்களில் கண்கள், புகைப்படக்கருவியை நேரடியாகப் பார்த்தவாறு எடுக்கப்படுவதால், படத்தில் இருக்கும் மனிதர்கள் நம்மை நேரில் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற பிம்பத்தை தருகிறது. நிலைத்தோற்ற ( லாண்ட்ஸ்கேப்) உருவப்படங்களை எடுக்கையில் இரண்டு விழியில், ஒரு விழியைப் படத்தின் மையத்தில் இருக்கும்படி இயற்றுகிறார். இது மட்டுமின்றி உருவப்படங்களில் முகம் மட்டுமே தெரியும் வகையில் மிக அருகில் வைத்து எடுக்கிறார், இவ்விரண்டு இயற்றங்களே இவரின் புகைப்படத்தை பார்வையாளர்களுடன் இணைக்கிறது என்றே கூறுவேன்.

தற்போது மெக்குரி Nikon D810 எனப்படும் நிழற்படக்கருவியை 24-70mm லென்ஸுடன் பயன்படுத்துகிறார். வீதிகளில் புகைப்படம் எடுப்பதற்கு இதையே பயன்படுத்தவே விரும்புகிறார் . இவரின் அனைத்து புகைப்படங்களும் f2.8-5.6 Apertureஇல் எடுக்கிறார். இதுவே பின்புலத்திலிருந்து, முன்னே நிற்பவரைப்பிரித்து காட்டுவதற்கான காரணம்.

ஆப்கன் பெண்மணி

ஆப்கான் கேர்ள் எனப்படும் இப்படம் ‘நேஷனல் ஜியோகிராபி’ இதழின் மிகப் பிரபலமான புகைப்படமாகும் .போரின் போது ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள அகதிகள் முகாமிலுள்ள பள்ளியில் இப்பெண்ணைப் படம்பிடித்துள்ளார். 1984ல் வெளிவந்த இப்புகைப்படம் இன்றளவும் புகழ்பெற்றது. இப்பெண்ணின் கண்கள் நம்மை வசியம் செய்கிறதென்றே கூறலாம். இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம் மெக்குரியின் உத்தியோகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று, அவரது புகைப்பட வாழ்க்கையை மாற்றி அமைத்தது . இப்பெண்மணியை மெக்குரி இரண்டு படங்கள் எடுத்துள்ளார். முதல் படத்தில் முகத்தை மூடியவாறு கண்கள்மட்டும் தெரியும் வகையிலும், பின்பு முழு முகத்தோடு தனித்துத்தெரியும் எனத் தோன்றி, இரண்டாவது படமாக முகத்தோடு கண்கள் காமெராவை பார்த்தவாறு எடுத்திருக்கிறார். இப்படத்தை முன் அட்டையில் வைத்தால் பயமூட்டுவதுபோல் இருக்குமோ என முகத்தை மூடியவாறு உள்ள மற்றொரு படத்தை வைக்க முன்வந்தார்கள் வடிவமைப்பாளர்கள், ஆனால் இதழின் புகைப்பட ஆசிரியர் இப்படமே அட்டைப்படத்தில் வரவேண்டும் என தேர்வு செய்தாராம்.

இப்பெண் போரை கடந்து வந்தாளா? இப்பெண்மணி யார்? இவளது பெயர் என்ன? பின்புலம் என்ன? எனப் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் ‘நேஷனல் ஜியோகிராபிக் சொசைட்டி’யிடம் இதற்குப் பதில் இல்லை.1984 லில் எடுத்த ஒரு புகைப்படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு சுமார் 17 வருடங்கள் கழித்து இப்பெண்மணியைத் தேட துவங்கியுள்ளனர். ஒரு புகைப்படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இப்பெண்ணை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பதை ‘Search for the Afgan Girl – A Life Revealed’ என்னும் ஆவணப்படமாக்கியுள்ளனர். இப்பெண்ணை மெக்குரி 1990களில் தேட முயன்று அவை பயனுறாத நிலையில், 2002-ல் நேஷனல் ஜியோகிராபிக் சேனல் ஒரு குழுவை நியமித்து இப்பெண்மணியைத் தேடுவதை தொடர்ந்துள்ளனர். பெயர் அறியாத பெண்ணை, 17 வருடப் பழமையான படத்தை வைத்துக்கொண்டு கண்டுபிடித்தது மட்டுமின்றி, அட்டைப்படத்தில் உள்ள பெண்தான் இவர் என ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர் என்பது மிகப்பெரும் சாதனை. அவ்வகையில் இது சுவாரசியமான ஆவணப்படங்களில் ஒன்று.

ஒரு சிறந்த புகைப்படம் என்பதென்ன ?

மெக்குரியின் படங்கள் திட்டமிடப்படாமல் தக்கத் தருணத்தை காட்சிப்படுத்தும் வகையில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. சீரான இட அமைப்பு, சரியான சந்தர்ப்பம், சரியான ஒளியோட்டம் மற்றும் படத்தின் வண்ணம் ஆகிய நான்கு முக்கிய விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சிறந்த புகைப்படம் அமையும் என்கிறார் ஸ்டீவ் மெக்குரி. இதில் ஏதேனும் ஒன்று சரியாக அமையவில்லை என்றாலும் அவர் அதே இடத்திற்குச் சரியான சந்தர்ப்பம் அமையும் வரை வருவாராம். எந்தவித திட்டமும் இல்லாமல் வீதிகளைச் சுற்றியவாறு புகைப்படங்களை எடுக்கிறார் மெக்குரி. ஒரு நாள் முழுவதும் சுற்றிவிட்டு ஒரு புகைப்படம் கூட எடுக்காமல் திரும்பிய நாட்கள் பல உண்டு என்கிறார் . ஒரு நாளில் மென்மையான ஒளி இருக்கும், சமயத்தில் திறந்த வெளியிலும், கடுமையான வெயில் நேரங்களில் உட்புறமான இடங்களில் படங்கள் எடுக்கிறார்.

ஒரு புகைப்படத்தின் வண்ணம், அதன் மனநிலையைக் குறிக்க முக்கிய பங்களிக்கிறது. படத்தின் வண்ணங்களே தனி அங்கமாக திகழ்கிறது என்கிறார் மெக்குரி. வண்ணங்களைப் படிப்பது ஒரு தனி கலை .இருக்கும் வண்ணங்களில் எதை உபயோகிப்பது , எதைத் தேர்வுசெய்வது என்பது தொடர்பயிற்சியின் பின் வருவதே. எம்மாதிரியான வண்ணங்களைக் கலப்பது, எதைச் சேர்க்காமல் இருந்தால் காட்சியின் அமைப்பு சிறப்பாக அமையும் என்பது பழக்கத்தின் வழியே மட்டுமே வெளிப்படும் என்கிறார் மெக்குரி. ஒரு படத்தின் வடிவத்தை தேர்தெடுக்கையில் அதன் வண்ணத்தைப் பார்த்து தேர்வு செய்வது முக்கியம். வண்ணங்கள் முற்றிலும் வேறுபட்ட தனிக்கதையை கூறும் தன்மையுடையதென்கிறார் மெக்குரி.ஒரு புகைப்படத்தின் வண்ணம், அதன் மனநிலையைக் குறிக்க முக்கிய பங்களிக்கிறது. படத்தின் வண்ணங்களே தனி அங்கமாக திகழ்கிறது என்கிறார் மெக்குரி. வண்ணங்களைப் படிப்பது ஒரு தனி கலை .இருக்கும் வண்ணங்களில் எதை உபயோகிப்பது , எதைத் தேர்வுசெய்வது என்பது தொடர்பயிற்சியின் பின் வருவதே. எம்மாதிரியான வண்ணங்களைக் கலப்பது, எதைச் சேர்க்காமல் இருந்தால் காட்சியின் அமைப்பு சிறப்பாக அமையும் என்பது பழக்கத்தின் வழியே மட்டுமே வெளிப்படும் என்கிறார் மெக்குரி. ஒரு படத்தின் வடிவத்தை தேர்தெடுக்கையில் அதன் வண்ணத்தைப் பார்த்து தேர்வு செய்வது முக்கியம். வண்ணங்கள் முற்றிலும் வேறுபட்ட தனிக்கதையை கூறும் தன்மையுடையதென்கிறார் மெக்குரி.

நீளம், மஞ்சள், சிவப்பு, பச்சை ஆகிய வண்ணங்களே இவரது படங்களில் அதிகம் பார்க்கமுடிகிறது. முதன்மை நிறங்களையே பிரதானமாக உபயோகிக்கிறார், அதோடு முரண்படும் வண்ணங்களில் மையப்பொருளாக வைக்கிறார். சுற்றுப்புற வண்ணமும், மையப்பொருளும் வண்ணமும் முரண்படுவதாலே இவரின் புகைப்படங்கள் கண்கவரும் வகையில் உள்ளது.

இவரின் புகைப்படங்களின் பின்கதையைப் பற்றி வெளிவந்த ” Steve Mccury Untold – The Stories Behind His Photographs ” என்ற புத்தகத்தை படித்தேன். இப்புத்தகத்தில் இவரின் புகைப்படங்கள் பற்றின பின் குறிப்புகள் மற்றும் 30 வருடமாகப் புகைப்படம் எடுக்கையில் இவர் கடைப்பிடிக்கும் வழக்கங்களைக் கூறியுள்ளார். இதில் ‘மழை நாளில் ஒரு குழந்தையுடன் ஒரு பெண் கார் அருகே நின்று பிச்சை கேக்கும்’ ஒரு புகைப்படத்தை எடுக்க அவருக்கு எட்டிலிருந்து பத்து நொடிகள் மட்டுமே தனக்கு அவகாசம் கிடைத்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு படத்தை எடுக்க 8 நொடிக்குள் இயங்கவேண்டுமானால் எவ்வளவு வேகமாகச் செயல்பட்டிருக்கவேண்டும். ஒவ்வொரு தருணமும் ஒரு புகைப்படக்காரருக்கு எவ்வளவு முக்கியமென இந்நிகழ்வு உணர்த்துகிறது.

nyc5919-overlay

உலகை உற்றுப்பார்க்கும் ஒரு கருவியாக புகைப்படங்கள் திகழ்கிறது. ஒரு இடத்தின் பார்வை, ஒவ்வொரு புகைப்படக்காரர்களுக்கும் வெவ்வேறாகவே தெரிகிறது. புகைப்படங்களின் வழியே பல்வேறு கலாச்சாரத்தைக் காண முடிகிறது. ஒரு புகைப்படத்தை பார்த்ததும், அதன் முன்பின் என்ன நடந்ததென்ற உண்மையை கடந்த, கற்பனையை பார்வையாளன் செய்துகொள்ள முடியும் என்பதே இக்கலையின் சிறப்பம்சம்,இக்கற்பனை சரியோ,தவறோ அதைப் பற்றி யோசிக்க வைக்கவேண்டும் என்கிறார் மெக்குரி. சரியான தருணத்தை, சீரான இடத்தில், சீரானவெளிச்சத்தில் எடுத்துவிட்டால் ஒரு நல்ல புகைப்படத்தை உருவாக்கிவிடலாம். இதன் வெளிப்பாடே இவரின் புகைப்படங்கள். ‘நீல வண்ண சுவர்களின் நடுவே ஓடிப்போகும் ஒரு சிறுவனின்’ இப்புகைப்படத்தை எடுக்க மெக்குரி முதலில் இவ்விடத்தைத் தேர்வுசெய்துவிட்டார், பின்பு இங்குப் போய்வரும்வழிப்போக்கர்களைக் கவனித்து, அதில் இச்சிறுவன் ஓடிவரும் தருணத்தில் எடுக்கவேண்டுமென முடிவுசெய்திருக்கிறார். புகைப்படக்காரருக்கு காத்திருந்தாலே சிறந்த படங்கள் எடுக்க உதவுகிறது.

INDIA. Jodhpur. 2007.

ஒரு புகைப்படக்காரர் படங்களை எடுப்பதற்கக் கடைப்பிடித்து வரும் எண்ணங்கள் தனித்தன்மை வாய்ந்தது. இவ்வகையில் மெக்குரியின் உருவப்படங்களையும் , அவர் பயன்படுத்திய வண்ணங்களையும் ஒரு சேரப்பார்க்கையில் அவர் கடைப்பிடித்து வந்த ஒற்றுமைகள் தெரிகிறது. இதுவே ஒவ்வொரு புகைப்படக்காரரையும் தனித்து வைக்கிறது. எதை எடுக்கவேண்டும், அதை எப்படி எடுக்கவேண்டுமென்ற பார்வையே ஒரு புகைப்படக்காரர் தனக்குள் பதிலளித்துக்கொள்ளவேண்டிய முதல் கேள்வியாகும்.

P.S: Photos are copyrighted to the respective owners.

I am a Passionate Traveller, Photographer and Film Maker. I feel Literature and Arts are the essence of life and I go by the verse "I Read, I Travel, I Become". Join my site for my Tales and Travels.