கோடாக்குரோமின் கடைசி படச்சுருள். ஒரு சகாப்தத்தின் முடிவை பதிவு செய்த இரு படங்கள்

கோடாக்குரோம் எனப்படும் படச்சுருள் 1935-ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கோடாக் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்வந்த படச்சுருள்களை இருட்டறையில் உருவாக்கும்போது அது நெகடிவ் இமேஜை தருகிறது. அதை இரண்டாவது முறையாக வெளிப்படுத்தும்பொழுது, இரண்டு முறை நெகடிவ் படம் வெளிவந்து சேருகையில் அது பொசிட்டிவ் படமாக மாறுகிறது. கோடாக்குரோம் படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதை இருட்டறையில் உருவாக்கும்போது படத்தின் நெகடிவ் இமேஜை தராமல் நேரடியாக பாசிட்டிவ் இமேஜை தருகிறது. இதை “Reversal Film” என்கிறார்கள். நெகடிவ் வழியாக வரும் படம் Additive முறையை பின்பற்றுகிறது, ஆனால் கோடாக்குரோம் படச்சுருள் Subtractive முறையில் வெளிப்படுத்தப்படுகிறது. Subtractive முறையில் படத்தை வெளிக்கொண்டுவர இரண்டு வண்ணங்கள் மற்றுமே பயன்படுத்தப்படுகிறது ஒன்று நீளம் மற்றும் பச்சை, மற்றொன்று சிவப்பு மற்றும் செம்மஞ்சள். இதனால் படத்தை இருட்டறையில் வெளிகொண்டுவருவதற்கான நேரம் குறைகிறது. இம்முறையை John Capstaff என்பவர் 1913-ல் கண்டுபிடித்தார். இப்படச்சுருளின் பெரும் உற்பத்தி 1935 முதல் சுமார் 75 ஆண்டுகள் நீடித்தது. படச்சுருள்களின் சரிவினாலும், டிஜிட்டல் காமெராக்களின் வளர்ச்சியாலும் 2009 ஆம் ஆண்டு இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்பு 2010 ஆம் ஆண்டு இதை வெளிப்படுத்துவதற்கு உண்டான மூலப்பொருட்களின் உற்பத்தியை கோடாக் நிறுவனம் நிறுத்தியது.

jp-film-3-jumbo

screen shot 2019-01-19 at 6.33.38 pm
நெகடிவ்
screen shot 2019-01-19 at 6.33.55 pm
நெகடிவ் + நெகடிவ் = பாசிட்டிவ் புகைப்படம்
diapositive
Reversal filmல் நேரடியாக வெளிவரும் பாசிட்டிவ் புகைப்படம்

இப்படசுருளானது ஒளிமயமான வண்ணங்களை நேரில் பார்ப்பது போன்றே வெளிப்படுத்துவதற்காக பெயர் போனது. புகைப்பட வல்லுநர்கள் முதல் இளம்புகைப்படக்காரர்கள் வரை அனைத்துப் பிரிவிலும் இப்படச்சுருள் பிரபலமாக இருந்தது. இப்படச்சுருள் பத்திரிகை புகைப்படக்காரர்களால் பரவலாக உபயோகிக்கப்பட்டு வந்தது . இப்படச்சுருளில் எடுக்கும் படங்களை Slide எனப்படும் ட்ராஸ்பரென்ட் ப்ரேம்( Transparent Frame) ஒன்றில் வைத்து அதை ஸ்லைடு ப்ரொஜெக்டர் மூலம் பெரிய திரையில் பார்க்க முடியும். இதை பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும் படங்களைப் பகிர பயன்படுத்தினார்கள். இதுவே இப்படச்சுருள் சாமானிய மக்கள் மத்தியிலும் பிரபலமானதற்கான காரணம்.

 

 ஸ்லைடு மற்றும் ஸ்லைடு ப்ரொஜெக்டர்

இப்பாடச்சுருளை நிறுத்தியதற்குப்பின், இதன் 75 வருட முடிவிற்குச் சமர்ப்பணம் செய்யும் வகையில் வெளிவந்த இரண்டு படங்களை சமீபத்தில் பார்த்தேன். ஒன்று ‘கோடாக்குரோம்’ என்னும் படம், மற்றொன்று ‘தி லாஸ்ட் ரோல் ஆப் கோடாக்குரோம்’ என்னும் நேஷனல் ஜியோக்ராபி சேனலின் ஆவணப் படம்.

“The Last Roll Of Kodachrome”  ஒரு சகாப்தத்தின் முடிவை பதிவு செய்த ஆவணப்படம்

இதில் தயாரிக்கப்பட்ட கடைசி படச்சுருளை பிரபல புகைப்படக்கலைஞரான ‘ஸ்டீவ் மெக்குரி’ தான் பயன்படுத்தினார் . அமெரிக்காவைச் சேர்ந்த மெக்குரியின் புகைப்படங்கள் பிரசித்தி பெற்றவை. ‘நேஷனல் ஜியோகிராபி’ இதழின் பல முக்கிய முன் அட்டைப் படங்களை எடுத்துள்ள இவர் சுமார் 30 வருடங்களாக நேஷனல் ஜியோகிராபியின் பல்வேறு திட்டங்களில் இணைந்து புகைப்படங்கள் எடுத்து வருகிறார்.

screen shot 2019-01-17 at 6.12.35 pm
The Last Roll Of Kodachrome

“The Last Roll Of Kodachrome” என்னும் நேஷனல் ஜியோகிராபியின் ஆவணப்படம், ஸ்டீவ் மெக்குரி கடைசி கோடக்குரோம் படச்சுருளை எப்படிப் பயன்படுத்துகிறார் ? இவர் கோடக்குரோமில் எடுத்த கடைசி 36 படங்கள் என்ன? என்பதைப் பற்றிய பதிவே. மெக்குரி 30 வருடங்களுக்கு மேலாக கோடக்குரோம் படச்சுருளைத் தினம்தோறும் பயன்படுத்தி வருகிறார். இப்படச்சுருளில் சுமார் 8 லட்சம் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். இப்படச்சுருள் தரும் வண்ணங்கள் போன்று வேறு எதிலும் சிறப்பாக வண்ணங்கள் வருவதில்லை என்கிறார் மெக்குரி . இப்படச்சுருளில் 8 லட்சம் படங்களை எடுத்த மெக்குரி, தனது கடைசி படச்சுருள் என்றதும் அதைப் பயன்படுத்த மிகவும் யோசித்து செயல்படுகிறார். இப்படத்தொகுப்பை Nikon F6 என்ற Analog புகைப்படக்கருவியை வைத்து எடுக்கிறார். கடைசி 36 படங்கள் என்றதும் புகைப்படங்களை எடுப்பதற்கு முன்பு டிஜிட்டல் காமெராவின் வழியே சோதனை படங்களை எடுத்துப் பார்த்தபின் முடிவு செய்கிறார். சில இடங்களில் ஒரு படம் போதுமா எனச் சந்தேகம் கொள்கிறார். இதுதான் உன் கடைசி படம் எதை எடுக்கப் போகிறாய்? என்று கேட்டால் ஒரு புகைப்படக்காரர் என்ற வகையில் என்னிடம் பதில் இல்லை, எந்தப் புகைப்பட கலைஞராலும் இதற்கு பதில் அளிக்க முடியுமா என சந்தேகம்தான். இது புகைப்படக்காரர்களுக்கு பெரும் பயம் தரும் கேள்வி என்றே தோன்றுகிறது. ஒரு புகைப்படக்கலைஞரின் கருவியைக் கைப்பற்றிவிடலாம், ஆனால் கடைசி பார்வை வரை கண்கள் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கும் என்பது தான் உண்மை . ஒவ்வொரு 36 படங்களுக்கும், கடைசி 36 படங்களுக்குமான வித்தியாசமே, மெக்குரியின் தயக்கத்திற்குக் காரணம். மெக்குரி எடுக்கும் 36 படங்களை எப்படித் தேர்வு செய்கிறார் என்று காட்டுகிறது இப்படம்.

முதலில் அவருக்குப் பிடித்த பிரபல நடிகரான ராபர்ட் டெனீரோவை எடுக்க முடிவு செய்கிறார். முதலில் எடுத்த சில படங்களை மிகுந்த தயக்கத்துடனே எடுக்கிறார் மேக்குறி. டெனீரோவை சுமார் 5 படங்கள் எடுக்கிறார். ஐந்தில் இரண்டு புகைப்படங்கள் சரியாக வருமா என்ற தாயகத்தில் ஒரே படத்தை இரண்டு முறை எடுக்கிறார்.

 

அவரது உத்தியோகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற இடங்களில் ஒன்றான இந்தியாவில் அடுத்து உள்ள புகைப்படங்களை எடுக்கவேண்டும் என்று முடிவு செய்து மும்பைக்கு வருகிறார் மெக்குரி. இங்கு அமிதாப் பச்சன், அமீர்கான், நந்திதா தாஸ் , சேகர் கபூர் மற்றும் சென்ஹாஸ் ஆகிய பாலிவுட் பிரபலங்களையும், மும்பையின் தாராவியில் ஒரு படமும் மற்றும் அங்குச் சிற்பங்கள் செய்யும் இடத்தில் ஒரு படமும் எடுக்கிறார். அவரது புகைபடத்தொகுப்பில் நெருக்கமான படங்களை ராஜஸ்தானில் எடுத்ததால் மும்பையிலிருந்து அங்குச் செல்ல வேண்டும் என்று முடிவுசெய்கிறார். இங்கு ராபாரி எண்ணப்படும் ஆடு மேய்க்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒன்பது நபர்களைப் படம் எடுக்கிறார்.

 

இந்தியாவிலிருந்து இஸ்தான்புலில் உள்ள பத்திரிக்கை புகைப்பட ஆளுமையான அரா குலரை புகைப்படம் எடுத்துவிட்டு, நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் படங்கள் எடுத்துள்ளார். கடைசி பாச்சுருள் என்பதால் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறார் மெக்குரி.

 

கடைசி படத்தை பார்சன்ஸ் என்னும் இடத்தில் உள்ள உள்நாட்டுப் போரில் இறந்தவர்களுக்கான கல்லறை தோட்டத்தில் எடுத்து முடித்தார். கோடாக்குரோம் படச்சுருள்களை உலகில் கடைசியாக உருவாக்கம் செய்து தந்த இடம் Parsons Kansas ல் உள்ள Dwayne’s Photo என்னும் கடையாகும் . இதுவே மெக்குரி தனது கடைசி படத்தை அங்கு எடுத்ததற்கான காரணம். கொடக்குரோமின் கடைசி பக்கத்தில் பதிந்த படம் இது. மெக்குரி இக்கடைசி சுருளின் 36 படங்களை எடுக்க எவ்வித முன்திட்டமும் இல்லாமல் சுமார் 30,000 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டு, 6 வார அவகாசம் எடுத்து இப்படங்களை எடுத்தார்.

 

இப்படங்கள் டெவெலப் ஆகி வந்ததும், அதைப் பார்த்து “நான் டிஜிட்டல் படங்கள் எடுப்பதை நிறுத்திவிட்டு கொடாக்குரோமிலேயே படம்பிடிக்கவே ஆசைப்படுகிறேன்” என்கிறார் மெக்குரி.
” Frame 36 – One Last – of Vivid Colors” என்று இப்படம் முடிகிறது. 75 ஆண்டுகளாக வெளி வந்துகொண்டிருந்த படச்சுருள்களின் முடிவிற்கு ஒரு சிறந்த சமர்ப்பணமாக, இப்படம் ஒரு சகாப்தத்தின் முடிவைப் பதிவு செய்திருக்கிறது.

கோடாக்குரோம் திரைப்படம் –  நினைவுகள் வழியே ஒரு சமர்ப்பணம்

‘The Last Roll of Kodachrome’ ஆவணப்படத்தைத் தொடர்ந்து நெட்ஃப்லிக்ஸ்’ல் கடந்த வருடம் வெளிவந்த ‘கோடாக்குரோம்’ என்ற திரைப்படத்தை பார்த்தேன். புகைப்படத்துறையில் மாபெரும் வெற்றிகண்ட “Ben” என்ற மூத்த கலைஞர், புற்றுநோயால் மரணப்படுக்கையில் தன் இறுதி நாட்களில் உள்ளார். அவர் பலவருடங்களுக்கு முன்பு எடுத்த நான்கு கோடாக்குரோம் படச்சுருள்கள் உருவாக்கப்படாமலே இருக்கும் நிலையில், இப்படச்சுருள்களை வெளிப்படுத்துவதற்கு உண்டான மூலப்பொருட்கள் தற்போது உலகிலேயே பர்சன்ஸ் என்னும் ஊரில் உள்ள ‘Dwayne’s Photo’ என்ற கடையில் மட்டுமே உள்ளது. இக்கடையில் இச்சேவை இனி 5 நாட்களுக்கு மட்டுமே தொடரும் என்பதால் Ben தனது உதவியாளர் Zoe விடம், இவ்விடத்திற்கு தன் மகனுடன் ஒரு பயணம் செல்ல வேண்டும் என்கிறார். Zoe அவரது மகன் Matt என்பவரைத் தேடி செல்கிறாள். Matt தன் தந்தையுடன் பேசி 10 ஆண்டுகளுக்குமேல் இருக்கும் நிலையில், நான் ஏன் வர வேண்டும் என மறுக்கிறார். Zoe இது ‘Benன் கடைசி ஆசை’ என மனதில் கொண்டு வரும்படி சொல்கிறாள் ஆனால் Matt வர மறுத்துவிட்டார். Matt தனது வேலையைத் தவறவிடும் நிலையில் இருப்பதை, Benனின் மேலாளர் அறிந்து தான் இப்பயணத்திற்கு வர ஒப்புக்கொண்டால், போகும் வழியில் ஒரு ராக் பேண்ட் குழுவுடன் சந்திப்பை ஏற்பாடு செய்துதருகிறேன் என முன்வருகிறார். இச்சந்திப்பு அவ்வேலையைத் தக்க வைத்துக்கொள்ள உதவும் என்பதால் Matt பயணத்திற்கு ஒப்புக்கொள்கிறான் . Ben, Matt மற்றும் Zoe இணைந்து கான்சஸிற்கு காரில் பயணம் மேற்கொள்கிறார்கள். இப்பயணத்தில் Benனிற்கும் Mattற்குமான கறுத்து வேறுபாடுகளைத் தாண்டி ஒரு புரிதல் உண்டாகிறது.

Kodachrome poster

இப்படம் ஒரு கலைஞனின் சிக்கலான வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. கலையை நோக்கிச் செல்லும் தேடலில், பெரும்பாலான கலைஞர்கள் தன்னைச் சுற்றி இருக்கும் உறவுகளின் அன்பை உணரவும், அவர்களுக்கு நேரம் செலுத்தவும் விட்டுவிடுகிறார்கள். படத்தில் ‘எதற்காக என்றோ எடுத்த படத்தை நாட்டின் பாதி தூரம் பயணித்து பார்க்கவேண்டும்?’ என்று கேட்கையில், அவை பல வருடங்களுக்கு முன்பு என் ஆரம்ப நாட்களில் எடுத்த படங்கள் என்கிறார் Ben. என்னவென்றே தெரியாத பழைய குப்பைதானே என்று மகன் கேட்டதும். நான் எடுத்த ஒவ்வொரு படத்தையும் நினைவில் கொள்வேன் என்கிறார், Matt அதற்கு எத்தனை ஆயிரம் புகைப்படங்களை நினைவில் வைத்திருக்க முடியுமானால் என் பிறந்த நாள் நினைவிருக்கிறதா என்று கேட்கையில் தெரியாதென்கிறார் Ben. இதுவே ஒரு கலைஞரின் வாழ்க்கையில் உள்ள சிக்கல். படத்தில் Matt இடம் , தான் நினைத்தபடி ஒரு அப்பாவாக உன்னைப் பாதுகாக்க முடியவில்லை என்று உடைந்துபோகும் இடத்தில் ஒரு கலைஞரின் வெற்றிக்குப் பின் இருக்கும் தோல்வியை இயக்குநர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். Ben சந்தோஷம் என்பது ஒரு மாயை என்கிறார், எந்த கலைஞனும் சந்தோஷமாக இருந்ததில்லை என்கிறார். இது ஒரு வகையில் உண்மை, ஒரு கலையை உபாயம் செய்ய கலைஞன் எடுத்துக்கொள்ளும் மன அழுத்தம் வெளியே தெரிவதே இல்லை.

படத்தில், ஏன் டிஜிட்டலில் எடுக்காமல் இன்னும் ஃபிலிமில் எடுக்கிறீர்கள் என்பதற்கு மிக அழகான பதிலை சொல்கிறார் Ben, “என்னதான் ஆயிரக்கணக்கான புகைப்படங்களை டிஜிட்டலில் எடுத்து வைத்தாலும் அதைக் கணினியில் உள்ள data-வாகத்தான் வைத்திருக்கிறோம். ஓராயிரம் படங்களை எடுத்துக் குவிக்கிறோம், ஆனால் எத்தனைப் படங்களை எடுத்து வைத்து திரும்பிப் பார்க்கிறோம்? ஆனால் ஃபில்மில் எடுத்த படங்களை ஆல்பம் ஆக்கி வைக்கையில் பல நூறு முறை திரும்பி பார்க்கிறோம். இப்படத்தை 35mm கோடாக் ஃபிலிமில் எடுத்துள்ளனர். இப்படத்தை டிஜிட்டலில் எடுக்காமல் அனலாக் வடிவில் எடுத்ததே ஓர் தனிச்சிறப்பாக பார்க்கிறேன். படத்தில் மொபைலில் மேப் வழியைக் கூறிக்கொண்டு வருகையில் Ben அதைத் தூக்கி எறிந்துவிட்டு “Strictly Analog” என்கிறார். படத்தை ஃபிலிம் வடிவில் எடுத்து, இவ்வரிகளைப் படம் முழுவதும் இயக்குநர் கடத்திச் சென்றிருக்கிறார் என்றே தோன்றியது. படத்தின் வண்ணங்கள் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. படத்தில் வரும் பாடல்களும், பின்னணி இசையும் முக்கிய பங்களிக்கிறது. படத்தில் பல்வேறு இடங்களில் ஸ்டீவ் மெக்குரி எடுத்த புகைப்படங்களைத்தான் பயன்படுத்தியுள்ளனர்.

படத்தின் முடிவை எளிதில் யூகிக்க முடிந்தாலும், இதைச் சிறப்பாக இயக்கி உள்ளார் Mark Raso . புகைப்படகலைஞர்கள் குறிப்பாக படச்சுருள்களில் படப்பிடித்தவர்களுக்கு இப்படம் மனதிற்கு நெருக்கமாக அமையும். படத்தில் Ben காமெராவை கடைசி வரையில் கையேடு எங்குச் சென்றாலும் எடுத்துச் செல்கிறார், அதை ஒரு குழந்தையை பராமரிப்பது போல் பத்திரமாக வைத்துக்கொள்கிறார். Ben-னின் பார்வையில் புகைப்படக்காரர்கள் யார்? என்று சொல்வது சிறப்பாக உள்ளது. Ben இறந்ததும் சக புகைப்பட கலைஞர்கள் அவருக்கு ஃபிளாஷை மேல் நோக்கி அடித்து ராணுவ மரியாதை செலுத்துவதை போல் செய்கிறார்கள். ஒரு புகைப்படக்கலைஞருக்கு செய்யும் தலைசிறந்த மரியாதை இதுவாகத்தான் இருக்கமுடியும். Ben இறந்ததும் வரும் பாடல் இறப்பின் இயல்பைக் குறிப்பிடுவது போன்றே தோன்றுகிறது. Ben-னிடம் நீ யாரும் இல்லாமல் தனித்துத்தான் இறக்கப் போகிறாய்! என்று கூறுகையில் Ben இறப்பின் மேல் எவ்வித பயமும் , சோகமும் இன்றி நான் இறந்துவிடுவேன் ஆனால் நான் படைத்த படைப்புகள், நான் இறந்த பின்பும் மக்களோடு வாழ்ந்துகொண்டிருக்கும் என்கிறார். ஒரு வகையில் கோடாக்குரோம் படச்சுருள்களும் அப்படியானது தான், அதை நிறுத்திவிட்டாலும் 75 ஆண்டுகளாகக் காலத்தை நிறுத்தி வைத்து, மக்களின் நினைவுகள் வழியே வாழ்ந்துகொண்டேதான் இருக்கும் என்பதே உண்மை. இப்படம் புகைப்படகலைஞர்களுக்கும், கோடாக்குரோம் படச்சுருளுக்கும் சிறந்த சமர்ப்பணம்.

 

I am a Passionate Traveller, Photographer and Film Maker. I feel Literature and Arts are the essence of life and I go by the verse "I Read, I Travel, I Become". Join my site for my Tales and Travels.