வெட்டுவான் கோயில்

சில நாட்களுக்கு முன்பு தமிழ் நாட்டில் உள்ள குடவரை கோவில்களை பற்றி படித்துக்கொண்டிருந்தேன். அதில் என்னை வியக்கவைத்த இடங்களில் ஒன்று, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கோவிலான வெட்டுவான் கோயில். இக்கோவில் மதுரைக்கருகே உள்ள கழுகுமலை என்ற ஒரு சிற்றூரில், ஆரைமலை என்ற மலையின்மேல் அமைந்துள்ளது. இக்கோவிலை காண மதுரையில் இருந்து கழுகுமலை சென்றடைந்தேன். மலையின் மேலேறினால் மாலையின் நடுவே குடைந்தெடுக்கப்பட்டிருக்கிறது வெட்டுவான் கோயில். வெட்டுவான் கோவிலுக்கு இரண்டு இலக்கண பொருளுள்ளது ஒன்று ” சிற்பங்களுக்கான கோவில் ” மற்றொன்று ” வெட்டியவனுக்கான கோவில்”(கொலைசெய்தவர்கான கோவில்). இக்கோவில் 1954 வரை எட்டையபுரம் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது, பின்பு கழுகுமலையில் உள்ள கழுகசாமிமூர்த்தி கோவிலுக்கு எழுதி வைத்தார்.

DCIM100MEDIADJI_0105.JPG

மலையின்னுள்ளே 25 அடி ஆழத்திற்கு குடைந்தெடுத்து செதுக்கப்பட்டிருக்கிறது வெட்டுவான் கோவில். கோவிலை மேல்பகுதி , கீழ் பகுதி என இரண்டு அடுக்குகளாக செதுக்கியுள்ளனர். கோவில் மேலிருந்து கீழே தோண்டப்பட்டிருக்கிறது. கோவிலின் மேற்பகுதி மட்டுமே முழுமையாக செதுக்கப்பட்டிருக்கிறது. கீழ்ப்பகுதியிலுள்ள சிற்பங்கள் முடிக்கப்படாமல் இருப்பது காணமுடிகிறது. இரண்டு அடுக்கையும் பிரிக்கும் வகையில் “குடு” என்றழைக்கப்படும் சிறுசன்னதி போன்ற அமைப்பை செதுக்கியிருக்கிறார்கள். கோவிலின் நான்குமுனைகளிலுமுள்ள குடுகளில் பெண் உருவங்கள் உள்ளன. மேல்வரிசையில் நான்குமுனைகளிலும் நந்தியும், அதன்கீழ் யாழிகளும் உள்ளன.

குடுகள்

இக்கோவிலானது கிழக்கே பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் மேற்பகுதி, குவிமாடம்போல் அமைக்கப்பட்டு, அதன்மேல் மலர்ந்த தாமரையின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்கில், சிவன் மற்றும் உமா தேவி சேர்ந்துள்ளனர். கோவிலின் சன்னதியில், தற்போது ஊர்மக்கள் ஒரு விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு வருகின்றனர். சன்னதியின் உள்ளே தூண்கள், கூரை மற்றும் சுவர் பகுதி முடிக்கப்படாமல் விடப்பட்டிருகிறது.

screen shot 2019-01-11 at 3.06.24 am

தெற்கே கீழ் பகுதியில், குடுவிற்குள் சிவன் சிலை உள்ளது. சிவன் சுகாசன நிலையில் அமர்ந்துள்ளார். சிலையில் உள்ள 4 கைகளில், வலது கையில் மான் நிற்பது போன்றும், இடதுகையில் மழு எனப்படும் கோடரி போன்ற ஆயுதம் இருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. முன்னங்கைகள் இரண்டும் உடைந்திருக்கிறது. இதன்மேல் இருக்கும் அடுக்கில், தக்ஷிணாமூர்த்தி அமர்ந்துள்ளார். பொதுவாக தக்ஷிணாமூர்த்தியின் சிலை வீணை வாசிப்பது போன்றே செதுக்கப்படும், இவ்விடத்தில் மட்டுமே தக்ஷிணாமூர்த்தி மிருதங்கம் வாசிப்பதுபோல் காட்சியளிக்கிறார் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

img_20181017_180505
மேல் அடுக்கில் தக்ஷிணாமூர்த்தி, கீழ் பகுதியில் சிவன்

img_20181017_180419

கோவிலின் மேற்கு திசையின் மேல் அடுக்கில் நரசிம்மனும், கீழ் அடுக்கில் விஷ்ணுவும் உள்ளனர். விஷ்ணு செதுக்கப்பட்டிருக்கும் குடுவின் மேல் பகுதியில் மட்டும், ‘அன்னவாசல் கருக்கு’ மற்றும் ‘கொடிமங்கை’ எனப்படும் தேவதைகளின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு பக்கங்களின் குடுவின் மேல்பகுதியில் பூ அலங்காரங்கள் மட்டுமே உள்ளன. வடக்கே இரண்டு வரிசைகலிலும் பிரம்மாவின் சிற்பங்கள் உள்ளன. மேலுள்ள பிரம்மாவின் கைகளில் அக்ஷமாலையும், தாமரையும் செதுக்கப்பட்டிருக்கின்றன.

img_20181017_180659_1
மேல் அடுக்கில் நரசிம்மனும், கீழ் அடுக்கில் விஷ்ணுவும்
img_20181017_180642
“அன்னவாசல் கருக்கு” மற்றும் “கொடிமங்கை”
img_20181017_180921_1
பிரம்மா

மேல்தளத்தில், சிவனின் பணியாளர்களும், அதன் கீழ் நந்தி, பின்பு குரங்கு மற்றும் சிங்கம் போன்ற விலங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கீழ் தளத்தில், சிவனின் பணியாளர்களாக பூதகணங்கள் எனப்படும் குள்ளர்கள் ஏராளமாக செதுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பூத கணங்களும் வெவ்வேறு செயல்களை செய்வதுபோன்று தனித்தன்மையுடன் செதுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஒரே முக பாவனை கொண்ட பூதகணங்களை கூட காணமுடியவில்லை, அனைத்தும் ஒன்றோடொன்று மாறுபட்டுள்ளது. பூத கணங்கள் குள்ளமாக இருப்பது மட்டுமின்றி பருமனான உடலையும் , உருண்டையன முகத்தையும், கூர்மையான பற்களையும் கொண்டதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இவை நாட்டியம் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும், புல்லாங்குழல் மற்றும் பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

img_20181017_181056
பூத கணங்கள்

இக்கோவிலில் கல்வெட்டுகள் ஏதுமில்லாததால், இங்குள்ள சிற்பகங்களின் வடிவத்தை வைத்தே இக்கோவில் 8 ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. இக்கோவிலுக்கு முன்னுதாரணமாக தமிழகத்தில் வேறு அமைப்பு ஏதுமில்லை. பல்லவர்களின் குடைவரை கோவில்களை இக்கோவிலின் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், ஆனால் பல்லவர்கள் குடைந்த குடைவரை கோவில்கள் பொதுவாக தனித்து நிற்கும் கற்களிலிலேயே செதுக்கப்பட்டிருக்கிறது. மலையை குடைந்தெடுத்ததால், இதை ஒரே கல்லில் செய்ததென்றோ அல்லது ஒரு குகை என்றோ வகைப்படுத்த முடியாது. வரலாற்றாசிரியரான ‘சௌந்தராஜன்’ இக்கோவிலும் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில், கர்நாடகாவில் உள்ள விருபாக்ஷா கோவில் மற்றும் காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோவிலும் ஓரே போல் கட்டமைப்புள்ளதென்று கூறுகிறார். இக்கோவில் பல்லவர்களை தோற்கடித்தபின் உடனே வந்த மன்னர்களால் கட்டப்பட்டிருக்கக்கூடும், இதுவே இக்கோவில் பல்லவகால குடைவரைக்கோவில்களின் தாக்கத்தை கொண்டிருக்க காரணமாக இருக்கக்கூடுமென வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இப்பாணி குடைவரை கோவில், தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கோவில் எதனால் முடிக்கப்படவில்லை என்ற காரணங்கள் தெரியவில்லை, ஆனால் முடிக்கப்பட்டிருந்தால் தென் நாட்டில் சிறந்த குடைவரைகளில் ஒன்றாக திகழ்ந்திருக்கும்.

screen shot 2019-01-11 at 3.06.41 am

I am a Passionate Traveller, Photographer and Film Maker. I feel Literature and Arts are the essence of life and I go by the verse "I Read, I Travel, I Become". Join my site for my Tales and Travels.