காரைக்குடி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் 19 ஆம் நூற்றாண்டுகளில் கட்டிய மாளிகைகள் ஏராளமாக உள்ளது. இதில் கானாடுகாத்தான் மற்றும் பாலத்தூர் ஆகிய இடங்கள் மிக முக்கியமானவை. இவ்வூரை காண மதுரையில் இருந்து கானாடுகாத்தானுக்கு சென்றேன் ‘கானாடுகாத்தான்’ தமிழ்நாடு அரசால் பாரம்பரிய கிராமம் (ஹெரிடேஜ் வில்லேஜ் ) என்றறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வூரெங்கும் நிரம்பியுள்ள பழம்பெரும் கட்டிடங்கள் நம்மை நூறாண்டுகள் பின்னோக்கி கடத்தி செல்கிறது. கானாடுகாத்தான் செட்டிநாடு கிராமங்களில் ஒன்றாகும், சிவகங்கை மற்றும் பட்டுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 73 கிராமங்கள் மற்றும் இரு சிறுநகரங்களை சேர்த்து செட்டிநாடு என்று அழைக்கிறார்கள். இவ்விடங்களில் நகரத்தார் எனப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வசித்துவருகிறார்கள். 19 ஆம் நூற்றாண்டில் நகரத்தார்கள் வங்கி மற்றும் நிதி துறையில் மிக முக்கிய அந்தஸ்தை கொண்டிருந்தனர். இவர்களின் பொருளாதார நிலையின் சாட்சியே இப்பிரம்மாண்டமான மாளிகைகள்.
இவ்வீடுகளில் விசாலமான பிரதான முற்றம் வீட்டின் நடுவே அமைக்கப்பட்டுள்ளது. சில வீடுகளில் பிரதான முற்றமின்றி இரண்டு அல்லது மூன்று முற்றங்களுமுள்ளன. மூன்று, நான்கு தலைமுறைகள் ஒன்றாக வசித்துவந்ததால் முற்றம் போன்ற இடம் கூடி பேசுவதற்கு தேவைப்பட்டது. கல்யாணம் முதல் அனைத்து சடங்குகளும் பிரதன முற்றத்தில் வைத்துதான் நடத்துகிறார்கள். இந்நடைமுறையை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்கள்.
செட்டிநாடு வீடுகளை 5 கட்டுகளாக (பகுதிகளாக) பிரிக்கிறார்கள். முதலில் முகப்பு (வரவேற்பறை), இரண்டாவதாக வளவு ( புழங்கும் இடம் ), வளவு முற்றம் மற்றும் வீட்டின் அறைகளை கொண்டதாகும், மூன்றாவது பாகமாக இரண்டாங்கட்டு ( சாப்பிடும் இடம் ) பின்பு மூன்றாம் கட்டு ( சமையலறை ) கடைசியில் தோட்டம் உள்ளது. இக்கட்டுகளின் வரிசையில்தான் வீடுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து வீடுகளும் பொதுவாக கிழக்கு அல்லது மேற்கு திசையை பார்த்தே கட்டப்படுகிறது. ஒவ்வொரு வீட்டின் வாசல்கதவும் கண்கவரும் வகையில் செதுக்கப்பட்டிருக்கிறது. முன்வாசலில் நின்று பார்த்தால், பல கதவுகளின் குவியத்தில் பின்வாசலை நேரடியாக காணலாம். இந்நகரின் வீதி அமைப்பு நன்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. வீட்டின் முன் வாசல் ஒரு தெருவிலும், பின் வாசல் அதன் இணை சாலையிலும் வருமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. 18 ஆம் நூற்றாண்டிலேயே வீட்டில் விழும் மழை நீரை சேமித்து அதை ஊரில் உள்ள பொதுகுளத்திற்கு வடிகாலாக வகையில் கால்வாய் அமைத்துள்ளன. சுவர் வண்ணத்திற்கு சுண்ணாம்புடன் முட்டை ஓட்டை கலந்து பூசியிருக்கிறார்கள். இது வீட்டை குளுமையாக்குகிறது. தரைகளுக்கு கையால் செய்யப்பட்ட ஆத்தங்குடி டைல்ஸை பயன்படுத்துகிறார்கள். ஆத்தங்குடி கலைஞர்களின் கைவண்ணத்தை இவ்வோடுகளின் மின்னும் வண்ணங்களில் காண முடிகிறது.
இக்கண்கவரும் அமைப்புகள் நம் பாரம்பரிய கட்டமைப்பும், மேற்கத்தியபாணியும் சேர்ந்த கலவை ஆகும். தரைத்தளம் பொதுவாக தமிழ்நாட்டின் பாரம்பரிய கட்டமைப்பைக்கொண்டதாகும், மேற்கத்திய தாக்கத்தை மேல்தளத்தில் பெரிய கதவுகளிலும் உயரமான உட்கூரைகளிலும், மதில் மற்றும் கொடுங்கைகளிலும் காணலாம். 1920களில் க்யூபிசம் பாணியின் தாக்கத்தால் ஐரோப்பாவில் தோன்றிய அலங்கார கலையை ‘ஆர்ட் டெகோ’ என்றழைக்கிறார்கள். பளிச்சிடும் வண்ணங்களில் சதுரங்களையும், கோணங்களையும் கட்டிடங்களில் சேர்ப்பதே இப்பாணியாகும். செட்டிநாடு வீடுகள் இவ்வடிவத்தின் தாக்கத்தையே பிரதிபலிக்கிறது. காரைக்குடியில் உள்ள ‘ஆயிரம் ஜன்னல் வீடு’ இப்பாணிக்கு ஒரு சிறந்த உதாரணமாகும். இத்தாலியில் காணக்கூடிய ‘கோதிக்’ பாணி மண்டபமைப்பையும் இங்குள்ள கட்டிடங்களில் பிரதிபலிக்கிறது. இக்கட்டிடங்களுக்கான மூலப்பொருட்கள், கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் இறக்குமதி செய்து கட்டியிருக்கிறார்கள். இவர்கள் இத்தாலியின் மார்பில் கற்கள், பெல்ஜியத்திலிருந்து ஜன்னல்களுக்கான கண்ணாடி , தூண்களுக்கு பர்மாவிலிருந்து தேக்கு, விக்டோரியன் நாற்காலிகள், ஐரோப்பா மற்றும் பர்மாவிலிருந்து சரவிளக்குகள், சமைக்கும் பாத்திரங்களை இந்தோனேசியா மற்றும் செகோஸ்லோவியா போன்ற இடங்களிலிருந்தும் இறக்குமதி செய்துருக்கிறார்கள். பல்வேரு நாட்டின் கலை சங்கமமாக திகழ்கிறது செட்டிநாடு கட்டிடக்கலை.
நகரத்தார்கள், செட்டிநாட்டை அவர்களின் பூர்விகம் என கருதுகிறார்கள். ஆனால் இவர்கள் எந்த காலகட்டத்தில் இங்கு கூட்டமாக குடிபெயர்ந்தனர் என்ற சீரான தகவல்கள் ஏதுமில்லை. பூம்புகாரில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் காரணமாக சோழமண்டலத்திலிருந்து பாண்டிய மன்னன் சௌந்தர பாண்டியன் கொடுத்த நிலத்திற்கு இடம்பெயந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணகியும், கோவலனும் நகரத்தார் இனத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் இன அமைப்பியலை குறித்து ‘எட்கர் தர்ஸ்டன்’ எழுதிய ‘Castes & Tribes Of India’ என்னும் புத்தகத்தில் நகரத்தார்களின் வணிக திறனை கண்டு பாண்டிய மன்னர்களால் இவ்விடத்திற்கு அழைக்கப்பட்டார்கள் என்று குறிப்பிடுகிறார். 17 ஆம் நூற்றாண்டு வரை உப்பு வர்த்தகத்தையே முதன்மை தொழிலாக கொண்டிருந்தனர் நகரத்தார்கள் . ஆங்கிலேயர்கள் வந்த பின்பு, நகரத்தார்களுக்கு பர்மா போன்ற நாடுகளோடு ஏற்கனவே வணிகதொடர்பிருந்ததால், வணிகம் மேற்கொள்ள இடைத்தரகர்களாக நகரத்தார்களையே நியமித்தனர். இது இவர்களின் பொருளாதார அந்தஸ்தை பல மடங்கு உயர்த்தியது. இதுவே இவர்களை 18 ஆம் நூற்றாண்டுகளில் வாங்கி மற்றும் கடன் தரும் ஆளுமைகளாக உருமாற்றியது.
சுதந்திரத்திற்கு பின்பு இவர்களின் வணிகம் குறைய, இவர்களின் பொருளாதாரத்தை முன்னிறுத்த நகரங்களை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டனர். தற்போதைய செட்டிநாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் சீரான பராமரிப்பின்றி அவல நிலையில் நிற்கின்றது. செட்டிநாடு மேன்ஷன், பங்களா, சிதம்பர விலாஸ் போன்ற ஒரு சில கட்டிடங்கள் மட்டும் விடுதியாக மாற்றப்பட்டு பராமரிட்கப்பட்டு வருகிறது. இளம்தலைமுறைக்கு அங்கு தக்க வாய்ப்புகள் இல்லாததால் நகரங்களில் குடி பெயர்த்துள்ளனர். இப்பாரம்பரிய வீடுகளை பராமரிக்க இயலாமல், தொன்மையான வீடுகள் என்ற பெயரில் விற்கப்படுகிறது அல்லது தேக்கு மரங்களுக்காக இடிக்கப்படுகிறது. இவ்வீடுகளில் உபயோகிக்கப்பட்ட பழம்கால பொருட்களை, காரைக்குடியில் ‘முனீஸ்வரன் கோவில்’ அருகே உள்ள பழம்பொருள் அங்காடிகளில் காணலாம் குறிப்பாக செட்டிநாடு பெண்களின் கல்யாண சீர்வரிசைகள் இங்கு குவிந்துகிடக்கிறது. செட்டிநாடு வீடுகளில், சீர்வரிசையை வைப்பதற்கென்றே ஒரு தனி அறை இருக்குமாம். இப்பழம்பொருள் அங்காடி தெரு, செட்டிநாடு மக்கள் வாழ்ந்ததின் மிச்சமாக திகழ்கிறது. கானாடுகாத்தான் காலத்தின் மாற்றத்தை கண்முன் காட்டும் கால இயந்திரமாக திகழ்கிறது. இதன் மிச்சங்கள் பார்க்கவும் பராமரிக்கவும் வேண்டிய இடங்களில் ஒன்று.
Good Narration with detailed Photographs
Super harshi …. Go ahead . All t best
செட்டிநாட்டு வீடுகள் பற்றி நிறைவான கட்டுரை. படங்கள் கவர்கின்றன.