பல்லவர்களின் தடயங்களை தேடி
நண்பர்களுடன் வீட்டிற்கு வரும் வழியில் சொற்பிறப்பியல் பற்றி பேசிக்கொண்டிருந்தேன், அப்போது “பல்லவபுரம் நகராட்சி” என்றுள்ள பலகையை கண்டதும் விளையாட்டாக இங்கு பல்லவர்கள் வாசித்திருந்திருப்பார்கள், அதனால்தான் இப்பெயர் என்றேன். இவ்வுரையாடலே நான் வசிக்கும் இவ்விடத்தின் வேர்களை ஆராய தூண்டியது. தொல்பொருள் ஆராய்ச்சிகளில் பல்லவபுரம் முக்கிய இடம் வகிக்கிறது, தற்போது பல்லாவரம் என்று அழைக்கப்படும் இவ்விடத்தில் 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மஹேந்திரவர்மன்-1 ஆட்சி செய்திருக்கிறார். இதன் தடயமாக பல்லாவரம் மலையில் பல்லவ எழுத்துக்களுடன் கொண்ட குடைவரை கோவில் ஒன்றை விட்டு சென்றுருக்கின்றனர். கி.பி 600 காலகட்டத்தை சேர்ந்த இக்கோவில் சென்னை வட்டாரத்திலேயே புராதனமான கோவில் என்று கருதப்படுகிறது. பஞ்சபாண்டவ கோவில் என்று அழைக்கப்படும் இக்கோவில் தற்போது ஒரு தர்காவாக உருமாறியிருக்கிறது. இக்கோவிலானது பல்லாவரம் மலையில் இருப்பதையறிந்து அதை தேடிச்சென்றேன் .
பல்லாவரம் மலையானது திருசூலம் மற்றும் பல்லாவரம் ரயில் நிலையத்திற்கிடையே அமைந்துள்ளது. பரபரப்பான நகரத்திற்கிடையே இப்படி ஒரு இடமா? என்று வியக்கவைக்கும் அளவிற்கு இருந்தது. மலையின் ஒரு பாதி வரை குடியிருப்பு பகுதியாக இருக்கின்றது, மீதமுள்ள பகுதிகள் காடாகவே விட்டுவைக்கப்பட்டிருக்கிறது. குடியிருப்பு பகுதியை தாண்டியதும் பாதை சீராக இல்லை, கரடுமுரடான கற்பாதையாகவே உள்ளது. சாலையின் இருபுறமும் பாறைகளுக்கிடையே கள்ளி செடிகள் முளைத்திருந்தது. இவ்விடத்திலிருந்து சென்னையின் நகரமைப்பையும், விமானநிலையத்தையும் நன்கு காணலாம். பல்லாவரம் மலை “சார்னோகைட்” என்ற பாறைகளாலானது , இது 1900ல் முதலில் பல்லவராத்தில்தான் டி.எச். ஹோலன்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது இது மருத்துவ குணம் கொண்டதென்று ஆங்கிலேயர்கள் இவ்விடத்தில் சுரங்கவேலை செய்துவந்தனர்.
கீழே தெரியும் பரபரப்பான நகரத்தை பார்த்துகொன்டே மலை உச்சிக்கு சென்றேன். ஆனால் வரைபடத்தில் காட்டியது போல் அவ்விடத்தில் தர்காஹ் எதுவும் இல்லை, மாறாக இஸ்லாமிய கல்லறைகள் இருந்தது. அருகில் இருந்த ரிமோட் ஸ்டேஷன்னில், பஞ்ச பாண்டவ கோவிலை பற்றி கேட்டதும் கல்லறை இருக்கும் இடத்தையே காண்பித்தனர். இவ்விடத்தை மௌலா-கா-பாஹத் என்றுதான் அழைக்கிறார்கள். “சந்தனக்கூடு” எனப்படும் இஸ்லாமிய விழாவன்று, மொஹமத் நபியின் உடை மற்றும் முடி பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படுமாம். இவ்வழக்கம் தற்போது இங்கு நடக்கிறதா? என்று சீரான தகவல்கள் எதுவும் இல்லை.
குடவரை கோவில் தற்போதைய ஜமீன் பல்லாவரத்தில் இருப்பதையறிந்து சென்றேன். தற்போது “ஆஸ்தானா – இ- மௌலா அலி” தர்காவாக இருக்கும் இவ்விடத்தை, இஸ்லாமியர்கள் 200 வருடம் பழமையானதென்று நம்புகிறார்கள். இக்கோவிலின் இஸ்லாமிய கட்டமைப்பை கட்டியவர்களின் குறிப்புகள் ஏதும் இல்லை. கையின் ஐவிரல்களை வணங்குவதால், இக்கோவிலிற்கு பஞ்சபாண்டவர் கோவில் என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது. தர்காஹ்வின் உள்ளே பல்லவர்கள் குடைந்த குடைவரையின் கட்டமைப்பானது தற்போது சுண்ணாம்பால் பூசப்பட்டு அடையாளம் தெரியாமல் உள்ளது . இக்குகையின் ஒரு பகுதி முழுமையாக மூடப்பட்டிருக்கிறது, மூடப்பட்ட இவ்விடத்தில்தான், பல்லவ கிரந்த எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருக்கிறது.
1909ல் ஆர்.எச் கிருஷ்ணா சாஸ்திரி எழுதிய “எஃபிகிராஃபியா இண்டிகா” என்ற புத்தகத்தில் இக்கோவில் மாற்றப்படுவதற்கு முன்புள்ள புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இக்கோவில் இரண்டு வரிசை தூண்களுடன், 5 துவாரங்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் சிற்பங்களோ வடிவங்களோ எதுவும் இல்லாததால் இது யாருக்காக கட்டிய கோவில் என்று சீரான குறிப்புக்கள் இல்லை. இக்காலகட்டத்தில் உள்ள மற்ற கோவில்களை வைத்து, இதில் சிவலிங்கம் இருந்திருக்கக்கூடும் அல்லது உருவபடமாக வரையப்பட்டிருக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஐந்து துவாரங்கள் இருந்ததால், இக்கோவில் பஞ்சபாண்டவர்களுக்கு கட்டியதென்று கருதி பஞ்சபாண்டவ கோவில் என பெயர் வந்திருக்கூடும். கிபி 600 காலகட்டத்தை சேர்ந்த இக்கோவில் மாம்மல்லபுரத்தில் இருக்கும் குகைக்கோவில்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. இதை கட்டிய மஹேந்திரவர்மன்தான் தென்னிந்திய கோவில் கட்டிடக்கலையின் தந்தையாக திகழ்கிறார். பல்லவ கிரந்த எழுத்துகளில், மன்னனுக்கு சூட்டப்பட்ட வெவ்வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ளனர். அதிலிருக்கும் முதல் பெயர் “ஸ்ரீ மகேந்திர விக்கிரமா”. இக்குறிப்புகளின் ஒரு தனித்தன்மை என்னவென்றால், இதில் இடம்பெற்றிருக்கும் சில பெயர்கள் தெலுங்கு மொழியின் தோற்றம் கொண்டுள்ளது. மற்ற பெயர்கள் தமிழ் மற்றும் சமஸ்க்ரிதத்தில் உள்ளது. இதில் உள்ள சில பெயர்கள் திருச்சியில் உள்ள மேல் குகை கோவிலிலும் இடம்பெற்றுள்ளது . இவை மகேந்திர வர்மனின் சுபாவம் மற்றும் சுயவிருப்பங்களை வெளிப்படுத்துகின்றது.
சோழர் காலத்தில் பல்லாவரம்
பல்லவர்களுக்கு பின்பு , இவ்விடத்தை 11ஆம் நூற்றாண்டில் வாணவன்மாதேவி சதுர்வேதி மங்களம் என்றழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சான்றுகள் , திரிசூலதில் உள்ள திரிசூலநாதர் கோவில் கல்வெட்டுகளில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இக்கோவில் சோழர் காலத்தில் இரண்டாம் குலோத்துங்கனால் கட்டியதென்று நம்பப்படுகிறது. 1012- 1044 வரை ஆட்சி செய்த ராஜேந்திரனின் ராணியின் பெயரே வாணவன்மாதேவி ஆகும். 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோவில் கோபுரங்கள் எதுவும் இன்றி கட்டப்பட்டுள்ளது. ஆரம்பகால சோழர்களின் கோவில் கட்டமைப்பை இங்குள்ள கொடுங்கையின் வடிவத்தின்மூலம் காணலாம். இக்கோவிலின் விமானம் அரை வட்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. பல்லவரத்தை சுற்றி உள்ள 4 மலைகளுக்கு நடுவே இக்கோவில் அமைந்துள்ளது. சுரம் என்றல் மலைகளுக்கு நடுவே உள்ள இடம் என்று பொருள் இதுவே திரிசுரம் (திரிசூலம்) என்ற பெயர்க்கு காரணமாக இருந்திருக்கலாம்.
சென்னையின் முதல் விமானம்
பல்லாவரம் என்றதும் நினைவிற்கு வருவது விமான நிலையம். மெட்ராஸ் ஏரோட்ராம் 1929ல் திறக்கப்பட்டது. டாஞ்செலி என்ற ஹோட்டல் முதலாளி தனக்கொரு விமானம் கட்டித்தரகோரி கோச் வண்டி உற்பத்திசெய்யும் சிம்சன் கம்பெனியிடம் கேட்டனர். இவ்வண்டியின் சோதனை ஓட்டம் 10 மார்ச் 1910 அன்று பல்லாவரத்தில் நடைபெற்று பின்பு தீவுத்திடலில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதுவே சென்னையில் காணப்பட்ட முதல் விமானம். 17ஆம் நூற்றாண்டு வரை முகலாயர்கள் மற்றும் ஈஸ்ட் இந்தியா கொம்பனியின் ராணுவ முகாம் பல்லாவரத்தில்தான் இருந்திருக்கிறது. இவ்விடம் தற்போதைய விமான நிலையத்தின் இடமும் சேர்ந்ததாகும். ஆங்கிலேயர்கள் விமான நிலையத்தை செயின்ட் தாமஸ் மவுண்ட் என்றுதான் அழைத்தார்கள். 1948ல் விமானங்கள் வணிகமயமாகிய பொழுது இவ்விடத்தை மீனம்பாக்கம் என்று பெயர் மாற்றப்பட்டது.
கற்கால மனிதர்களின் சுவடுகள்
1851ல் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் “ஜியோலஜிகல் சர்வே”வை துவங்கினர் . இத்திட்டதில் பணிபுரிய வந்த “ராபர்ட் ப்ருஸ் பூட்டே” சர்வேயுடன் சேர்த்து, இங்குள்ள தொல்பொருள் இடங்களையும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். அவர் இவ்வாராய்ச்சியை தொடங்கிய ஒரு வருடத்தில் 1863ல் பல்லாவரத்தில் உள்ள துருப்புகள் அணிவகுக்கும் மைதானத்திலிருந்து ஒரு கப்பிக்கல் குழியில் ஒரு உறுதியான கல் கோடாரி ஒன்றை கண்டெடுத்தார். அக்கோடாரி பழைய கற்கால மனிதர்கள் (Palaeolithic age) உபயோகித்தது. இதில் முதுமக்கள் உபயோகித்த தாழிகளும், பல இறப்பு தொடர்பான பொருட்களும் எடுக்கப்பட்டது. பல்லாவரம் தென் இந்தியாவிலேயே மனிதர்கள் வாசித்த பழமைவாய்ந்த இடமென்று, தென்இந்திய வரலாற்றை மாற்றி அமைத்தது இக்கண்டுபிடிப்பு . இதை தொடர்ந்து ராபர்ட் பூட்டே கிட்டத்தட்ட 459 புராதன இடங்களை சென்னை மாகாணத்தை சுற்றி கண்டுபிடித்திருக்கிறார். இவர் இந்தியாவின் முன்வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படுகிறார். அவரது 33 வருடங்கள் ஆராய்ச்சியில், அகழ்ந்தெடுத்த 4000 கண்டுபிடுப்புகளை 1904 ஆம் ஆண்டு மெட்ராஸ் அருங்காட்சியகதிற்கு ரூ. 33,000க்கு கொடுத்தார். இவை தற்போது எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ளது, அதை பார்ப்பதற்காக சென்றால், Prehistoric பொருட்கள் காட்சிக்கு வைத்திருக்கும் இடம் புதுப்பிக்கப்பட்டிருப்பதால் பார்க்க முடியவில்லை. அங்கிருக்கும் பொறுப்பாளர்களிடம் கேட்டபொழுது “ராபர்ட் பூட்டேவின் சேகரிப்பு ஏதும் காட்சிக்கு வைப்பதில்லை” என்று கூறினார், “இப்பொருட்கள் அவரது கண்டுபிடிப்பின் 150 வருடங்களை கொண்டாடும் வகையில் 2013ல் சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டபொழுதுதான் பார்வைக்கு வைக்கப்பட்டதென்றும்” கூறினார். இத்தகைய பெருமைமிக்க சேகரிப்பை காட்சிப்படுத்தாமல் பூட்டி வைத்திருக்கார்களே என்று சற்று ஏமாற்றத்துடனே திரும்பினேன். பின்பு மூயூசியத்தின் பதிப்பகத்தில் “A catalogue of Foote collection of Indian prehistoric and protohistoric antiquities” என்ற புத்தகத்தில் அவரது சேகரிப்பின் புகைப்படங்களை பார்த்து வந்தேன்.
பூடேவின் கண்டுபிடிப்பிற்கு பின்பு, 2010 ல் பழைய பல்லாவரத்தில் ஆராய்ச்சி செய்ய ASI , இங்குள்ள 6 வார்டுக்கலில் புதிதாக கட்டிடங்கள் எழுப்பக்கூடாதென்று உத்தரவிட்டிருக்கிறது. The Ancient Monuments and Archaeological Sites and Remains Act, (AMASR) தற்போதைய பழைய பல்லாவதில் அமலில் உள்ளது. இங்கு புதிதாக கட்டிடங்கள் வாங்கவோ விற்கவோ முடியாது. ஆராய்ச்சியை மேற்கொள்ளவேண்டுமென்றால் இவ்விடத்தில் உள்ள 10,000 மேற்பட்ட வீடுகள் அகற்றப்படவேண்டும் என்பதே இதன் சிக்கல். கற்கால மனிதர்களின் கலாச்சாரத்தின் அடையாளமாக பல்லாவரம் மலையும், அதன் கீழயுள்ள பெரிய ஏரியும் திகழ்கிறது, இன்று பெரிய ஏறி மிகுந்த கவலைகிடமான நிலையில் உள்ளது. 189 எக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, தற்போது ஒரு பக்கம் குப்பை மேடுகளும் மற்றொரு பக்கம் லெதர் கம்பெனிகளின் கழிவுகள் , ஆக்கிரமிப்புகளென ஒரு சிறிய நிலத்திற்கு மாசடைந்து சுருங்கிக்கிடக்கிறது. இதுதான் நாம் 12,000 வருடம் பழமைவாய்ந்த இடத்திற்கு தரும் மதிப்பா ?
கற்கள்தான் மனித வாழ்க்கையில் நிரந்திரமாக இருக்கிறதோ! என்று தோன்றுகிறது. என்றோ 12000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களையும், நம்மையும் சேர்த்துவைக்கும் ஒரு பொருள் இருக்குமெனில் அவை கற்கள்தான். கற்கள் கருவிகளாகவோ, கோவில்களாகவோ, சிற்பங்களாகவோ என்றோ வாழந்தவர்களையும், நம்மையும் சேர்த்து வைக்கிறது. 1500 வருடங்கள் கழித்து மஹேந்திரவர்மனின் பெருமையை இன்றுள்ளவர்களிடம் சேர்க்கமுடியும் என்றால், அது கற்களால் மட்டுமே சாத்தியம். காலங்களால் அழிக்கமுடியாத இக்கற்கள் கால இயந்திரம் தானே!
ஹாய் ஹாசினி, நான் 2வாரம் முன்பு பல்லாவரம் மலைக்கு சென்றிருந்தேன்… நீங்கள் மேல் சொன்ன அனைத்தையும்.பார்த்தேன்.. ஆனால் அங்கு சமாதி, சர்ச், கொஞ்சம் கீழே கோயில் எல்லாம் இருக்கு… இது எல்லாம் இங்கு இந்த மலை மேல் வர காரணம் எனக்கு தெரியவில்லை..அந்த நபிகள் விழா இன்றும் நடக்கிறது அது உண்மை, ஆனால் சரியான வரலாறு எனக்கு கிடைக்க வில்லை… மஹேந்திர வர்மனின் மாளிகை கூட அங்கு இருந்ததாக சொல்லா படுகிறது ஆனாக் உண்மையான வரலாறு எனக்கு தெரியவில்லை..
Hi Kayal Happy that You visited the place after reading it 🙂
Hi
Good one 🙏