வால்பாறையின் வனைந்தரம்

 நிலப்பரப்பு

வால்பாறை, மேற்குதொடர்ச்சி மலையின் வரப்பில் ஆனைமலை தொடரில் உள்ள ஒரு சிறுநகரம். பொள்ளாச்சியில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் இவ்விடம் கடல் மட்டத்திலிருந்து 3914 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை தொடரானது புள்வெளிகளும், பள்ளத்தாக்குகளும் கொண்ட சோலைவனப்பகுதி. இப்பகுதி ஆனைமலை சரணாலயமாக 1974ல் அறிவிக்கப்பட்டது. பின்பு 2008ல் 1479 சதுர கிமீ பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகமாக ஆக்கப்பட்டது. ஆனைமலை துவங்கும் இடத்தில்தான் ஆழியார் ஆணை அமைந்துள்ளது. நான் அதிகாலை 3.30 மணி அளவில் ஆழியார் அணையிலிருந்து மேலே ஏறத்தொடங்கினேன். அணையிலிருந்து வால்பாறை வரை சுமார் 40 கொண்டைஊசி வளைவுகள் உள்ளது. முழு நிலவின் ஒரு சிறு வெளிச்சம் வானத்தை ஒளிரவைத்தது, வனத்தின் மரங்களுக்கிடையே வெண்ணிலவை பார்த்துக்கொண்டே வந்தேன். கீழே உள்ள நகரத்தின் ஒளியும் ஒவ்வொரு வளைவிலும் மாறி மாறி தெரிந்தது . ஓர் பள்ளத்தாக்கின் கீழ் ஏதோ நகர்வதை உணர்ந்து வண்டியை மெதுவாக்கினேன், விரிந்துப்படர்ந்த பிரமாண்டக்கொம்புகளை கொண்ட ஒரு கடமான் சந்திரனின் ஒளியின் முன் நிழலாகத் தெரிந்தது. இவ்வளவு பெரிய கடைமானை நான் இதற்கு முன்பு கண்டதேயில்லை, ரசிப்பதற்குள் எரிநட்சத்திரம் போல் கீழே ஓடிவிட்டது. நல்லிரவிலிருந்து அதிகாலை வரை இவ்வழியில் யானை, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமிருக்கும். ஏறும் வழியில் வனவிலங்குகளை எதிர்பார்த்துக்கொண்டே சென்றேன், எதுவும் தென்படவில்லை . பாதி வழி கடக்கையில் இருள்நீங்கி தேயிலை தோட்டங்களுக்கு இடையே சூரியன் எழுவதை பார்த்துகொண்டே வந்தேன். இளஞ்சிவப்புடன் தோன்றிய வானம் களைந்து சட்டென்று விடிந்துவிட்டது. வால்பாறை வந்தடைந்தவுடன் குளிருக்கு இதமாக ஒரு தேநீர் அருந்தினேன்.

வால்பாறை மற்றும் அதைச்சுற்றியுள்ள இடங்கள் எங்கும் தேயிலைத்தோட்டங்களாகத்தான் இப்போதிருக்கிறது. ஆனால் இவ்விடத்தில் ஆரம்பகாலக்கட்டத்தில் காபி மரங்கள் பயிரிடப்பட்டிருக்கிறது. 1864 ஆம் ஆண்டு ராமசாமி முதலியார் இங்கு காபி நடுதலை துவங்கிவைத்திருக்கிறார். பின்பு 1864ஆம் ஆண்டு கர்நாடிக் காபி கம்பெனி , ஆங்கிலேயர்களிடம் இருந்து காபி விளைவிப்பதற்காக ஒரு ஏக்கர் 5 ரூபாய் என்ற கணக்கில் பெற்றுக்கொண்டனர். எதிர்பார்த்த விளைச்சலும் லாபமும் வராததால், நிலத்தை விற்றுவிட்டனர். தற்போது இவ்விடம் வேவெர்லி மற்றும் வாட்டர்ஃபால் எஸ்டேடாக இருக்கிறது. 1875 ஆம் ஆண்டு ப்ரின்ஸ் வேல்ஸ் எட்வார்ட்-7, வால்பாறையை சுற்றி உள்ள புல்வெளி மலைகளில் வேட்டையாட திட்டமிட்டார். இதற்காக இங்கு முகாம் அமைத்து சாலைகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் அமைக்கப்பட்டது. பின்பு சில காரணங்கள் கருதி இத்திட்டம் கைவிடப்பட்ட்து. இதுவே வால்பாறையின் வளர்ச்சிக்கு ஓர் முக்கிய காரணம். பின்பு 1890ல், விண்டில் மற்றும் நோர்டன் என்பவர்கள் வால்பாறையின் ஒரு பெரும் பகுதியை பிரிட்டிஷ் அரசிடமிருந்து வாங்கினர். அவர்கள் இங்குள்ள விளைச்சலை லாபகரமாக்குவதற்காக, 17 வருட தோட்டவேலையில் அணுபவம் கொண்ட கார்வார் மார்ஷ் என்ற பண்ணையாளரை வேலைக்கு சேர்த்தனர். இவரே இவ்விடத்தை ஆனைமலை என்று பெயர்சூட்டினார். இவர் ஆனைமலையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவரின் சிலை ஒன்று பாராலை எஸ்டேடில் உள்ள ஒரு வியூபாயிண்டின் முன் நிருவப்பட்டிருக்கிறது.

கூழாங்கல் ஆறு

காலை உணவை அருந்திவிட்டு, டவுனில் இருந்து 10-நிமிட நடை தூரத்தில் உள்ள கூழாங்கல் ஆற்றிற்கு வந்தேன். அடர் கூழாங்கற்களின் மேல் தெளிந்த தூய்மையான தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. காலை வைத்ததும் தண்ணீரின் குளிர்ச்சியில் மெய்சிலிர்த்தது . ஆற்றங்கரையில் அமர்ந்து கற்களை பொருக்கி ஜென் ஸ்டோன்களை போல் அடுக்கினேன். ஸ்டோன் பலன்ஸிங் என்பது ஒரு தனிக்கலை. இதில் கற்களை ஒன்றின் மேல் ஒன்றடுக்கி சமநிலையில் கற்கள் கீளே விழாமல் நிறுத்திவைக்க வேண்டும். இங்கு நான் செய்திருக்கும் Balancingன் பெயர் Rock Staking, அதாவது தட்டையான கற்களை அதன்நீலத்தைப்பொறுத்து பெரிது முதல் சிறியது வரை ஒன்றின் மேல் ஒன்றடுக்குவது. எனக்கு பிடித்தமான கற்களை பார்த்து பார்த்து தேடி எடுத்து கொண்டேன். ஒவ்வொரு கல்லிலும் தண்ணீரின் விந்தையான ஓவியம் ஆச்சரியமூட்டியது.

சிங்கவால் குரங்கு

சிங்கவால் குரங்குகள் இந்தியாவில் உள்ள மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் மட்டுமே காணக்கூடியவை. இவைகளின் வால்களில் உள்ள குடுமி, சிங்கத்தின் வாலைப்போலிருப்பதால் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இவை primates எனப்படும் மனித குரங்கு வகையை சார்ந்தது. Canopy எனப்படும் மிக உயர்ந்த மரங்கள் கொண்ட அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கக்கூடியவை. மற்ற குரங்கு வகைகளைவிட கூச்ச சுபாவம் கொண்டதால், இவை மனிதர்கள் இருக்குமிடத்தில் பிரவேசிப்பதில்லை. இவ்விடத்திற்குரிய பழங்கள், இலைகள் , பூச்சிகள் மற்றும் சிறு விலங்குகளை உண்ணக்கூடியவை. International Union for Conservationன் அறிக்கையின்படி இவ்வகை குரங்குகள் மொத்தம் 3000 இருந்து 3500 வரை மட்டுமே உள்ளது என்பதால்  2010ல் வெளியிட்ட 25 Most Endangered Primates பட்டியலில் இடம்பெற்றது. அரசாங்கம் இதை காப்பாற்றுவதற்காக தகுந்த நடவடிக்கைகள் எடுத்ததால் இப்பட்டியலில் சிங்கவால் குரங்குகள் இப்போது இல்லை.

வால்பாறையில் தினமும் சிங்கவால் குரங்குகள் கூட்டமாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்கிறது . இவை சாலையை கடக்கையில் சாலை போக்குவரத்திலிருந்து அதை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள இரண்டு காவலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். குரங்குகள் சாலையை கடக்கையில் இருபுறமும் வரும் வண்டிகளை நிறுத்திவைத்து. அது கடந்தபின் அனுப்புகிறார்கள். இது மட்டுமின்றி, இவ்வினவிலங்கின் தன்மை மாறாதிருக்க வரும் பயணிகள் யாரும் அதற்கு உணவு கொடுக்காமல் இருக்கிறார்களா? என்றும் உறுதிப்படுத்திகிறார்கள்.

பறவைகளை தேடி

வால்பாறையில் இருவாட்சி (Great hornbill) எனப்படும் பறவைகளை காணலாம், அதைத்தேடி செல்லும் வழியில்  White Cheeked Barbet, Coppersmith Barbet, Greater Flameback, Brown Fish Owl, Sunbird, Oriental White Eye, Red-whiskered bulbul, Eurasian Spotted Dove, Crested Hawk Eagle  போன்ற பத்திற்கும் மேற்பட்ட பறவைகளை பார்த்தேன்.

இருவாச்சியின் இறக்கைகள் மிகவும் பெரிது என்பதால், அது பறக்கும் சப்தம் நன்றாக ஒளிக்கும் . இறக்கைசத்தத்தை பின்தொடர்ந்தேன், மரத்தினூடே பறந்து மரப்பொந்திற்குள் வந்தமர்த்தது. முட்டையிடும் காலம் என்பதால் அதன் கூட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தது. இருவாச்சிகள் மரப்பொந்திற்குள் முட்டை இடுபவை. சராசரியாக ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடக்கூடியவை . முட்டை இட்டதும், பெண் பறவை உணவளிக்க ஒரு சிறிய திறப்பை மட்டும் விட்டுவிட்டு, ஆண் பறவை கூட்டின் ஓட்டையை மண்னாலும்,மலத்தாலும் மூடிவிடும்.  குஞ்சுகள் வளரும்  மூன்றிலிருந்து ஐந்து மாதங்கள் வரை ஆண் பறவைதான், பெண் பறவைக்கும் சேர்த்து உணவளிக்கும். பள்ளிகள், பூச்சிகள், விதைகள், பழங்கள், தவளைகள் போன்றவற்றை கூட்டிற்கு கொண்டுவரும். ஒருநாளில் 70 முறை வரை கூட உணவெடுத்துவருமாம்.

இரவு நடை

இரவு லேசான தூரல் ஆரம்பித்தது, சாரல் கிளப்பிய மன்வாசனை விடுதியை விட்டு வெளியே இழுத்தது. எங்கும் தவளையின் சபதம் ஒலித்தது ஒரு டார்ச்சுடன் சப்தம் கேட்கும் இடத்தை நோக்கி சென்றேன். அங்கங்கே தவளைகள் இனச்சேர்க்கத்திற்காக அழைப்பிட்டுகொண்டிருந்தது. இவை Roarchestes இனவகை தவளைகள் என்பதை அறிந்துகொண்டேன்.

 விலங்குகளின் கூடம்

மறுநாள் காலையில் வால்பாறை விட்டு ஆழியார் அணையை நோக்கி சென்றேன். குரங்கு நீர்வீழ்ச்சியிலிருந்து நவமலை நோக்கி செல்லும்வழியில், கும்பலாக யானைகளை கண்டேன். வண்டியை கண்ட யானைகள் மிரண்டஞ்சி ஓடி ஒளிந்தது.

 நீலகிரி வரையாடுகள் , நீலகிரி மற்றும் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் மட்டுமே காணக்கூடியவை. சாலையில் நின்றுகொண்டிருக்கும்போதும், கடக்கும்போதும் அடிபடாமலிருக்க பாதுகாப்பிற்காக வனக்காவலர்களை வனத்துறை நியமித்துள்ளது, இதனால் சாலைவிபத்தில் இடிபடுவது தவிர்க்கப்படுகிறது. நாள்தோறும் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் , பெரிய விலங்குகளிலிருந்து ஊர்வினங்கள் வரை பல்வேறு வனஉயிர்கள் அடிபட்டு உயிரிழக்கின்றன. விலங்குகள் நம் வழியில் வரவில்லை, நாம்தான் விலங்குகளின் வழியில் பாதையிட்டுருக்கிறோம் என்பதை மனதில் கொண்டு வனப்பகுதியில் வாகனம் ஓடும்பொழுது கவனமாக பொறுப்புடன் செல்வது ஒவ்வொரு பயணிகளின் கடமையாகும்.

 

I am a Passionate Traveller, Photographer and Film Maker. I feel Literature and Arts are the essence of life and I go by the verse "I Read, I Travel, I Become". Join my site for my Tales and Travels.